கூட்டு மன நம்பிக்கைகள் நிகழ்த்துகிற தாக்கங்கள் மனித இனத்திற்கு எப்போதும் ஏற்படுவதுண்டு. அதைத்தான் பேய்கள் செய்கின்றன. பேய்களை மையப்படுத்திய கதைகளுக்கும், திரைப்படங்களுக்கும் இன்றளவும் கிடைக்கிற பெரும் வரவேற்பை நாம் கண்கூடாகக் காண்கிறோம். பேய் இருக்கிறது, இல்லை என்ற இரண்டுமே பேய் என்ற விஷயத்தைக் கட்டமைக்க விரும்புபவர்களின் நோக்கச் செயல். சிங்கப்பூர் நாட்டின் பின்னணியில், பேய் ஓட்டுகிற ஒருவரின் மகளுக்கு ஏற்படுகிற அனுபவங்கள் இந்நாவலில் பதிவாகியிருக்கிறது. சித்துராஜ் எழுத எடுத்துக்கொண்டது வித்தியாசமான கதைக்களம். தனிமை வாழ்க்கையில் யாருமற்ற நிலையில் ஏற்படுகிற மனப்பிரமைகளும், அப்படியான அகச்சிக்கல் ஏற்படுவதற்கான காரணங்களையும் சுவாரசியமாகச் சொல்கிறது இந்நாவல்.