ஒரு புத்தகம் என்பது ஒரு அனுபவம். அம்பறாத்தூணி என்ற இந்த நூலில் கபிலன்வைரமுத்து எழுதியிருக்கும் பதினைந்து சிறுகதைகளும் பதினைந்து அனுபவங்கள். பதினெட்டாம் நூற்றாண்டு, இருபத்தோராம் நூற்றாண்டு, முப்பத்தோராம் நூற்றாண்டு என பல்வேறு காலங்களில் இந்த கதைகள் நிகழ்கின்றன. இது பழமையை மீட்டுருவாக்கம் செய்ய முயற்சிக்கும் புதுமை இலக்கியம். இந்த நூலில் இடம் பெற்றிருக்கும் கற்பனைகளும் கருத்துக்களும் பொதுவெளியில் ஒரு சில ஆரோக்கியமான விவாதங்களை உருவாக்கலாம்.
4
கதையினூடே வரலாறுகளையும், செய்திகளையும் அறிந்து கொண்டமையில் மகிழ்ச்சி
வாசகர் உரை- அம்பறாத்தூணி
அன்புள்ள அண்ணா, தங்கள் சிறுகதை நூலான அம்பறாத்தூணி வாங்கி வாசித்தேன். அம்பறாத்தூணியின் ஒவ்வொரு அம்பும் வெவ்வேறு காலங்களை, வெவ்வேறு நாடுகளை, வெவ்வேறு வரலாறுகளை, வெவ்வேறு உணர்வுகளை கொண்டதாய் அமைந்தது. சில அம்புகள் காயமில்லாமல் நெஞ்சை தைய்த்தன. சில அம்புகள் வருடி சென்றன. சில அம்புகள் தொடாமல் சென்றன. அம்புகளுக்கே தெரியாமல் அவற்றை ஒன்றோடு ஒன்றாக மெல்லிய நூலினைக் கொண்டு கோர்த்துள்ளீர்கள். சிறந்த வில்லன் விருதிற்க்கு தகுதி வாய்ந்தவர் தாங்கள். இக்கதைகள் மூலமாக நம் மண்ணின் வரலாறு தொடங்கி உள்;ர், வெளிநாட்டு செய்திகளையும், எதிர்கால கனவொளிகளையும் காண முடிந்தது. உங்கள் தமிழ் கையாடல் நெகிழ செய்தது. அதிமாந்தர்கள், வால்பந்து ஆட்டம் போன்ற புதிய வார்த்தைகள் பூரிப்படைய செய்தது. பெருவெடிப்பு பற்றிய ஆராய்ச்சியே இன்னும் முடிவடையாத நிலையில், ‘பிரபஞ்சத்தரவு பெருவெடிப்பு” நிகழவுள்ளதாய் எழுதியிருப்பது ஆச்சரியப்படுத்தியது. கவிப்பேரரசு அவர்களின் மகாகவிதை நூலில் ‘மனிதனின் பரிணாம வளர்ச்சி இன்னும் முடிவடையவில்லை. இன்னும் சில நூற்றாண்டுகளில் வேறு உயிரினமாக மனிதன் உருமாறக்கூடும்” என்று எழுதியிருந்தார். அதன் நீட்சியாக மூலா கதை இருந்தது. ‘இருபதாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த மனிதர்களுக்குக் கழுத்து எலும்பில் அதிக தேய்மானம்” என்ற வரிகளை வாசிக்கும் போது சத்தமாய் சிரித்துவிட்டேன். ‘அதற்கு சில நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்களுக்கு முதுகெலும்பு தேய்மானம்” என்ற வரிகளை வாசிக்கும் போது வரலாற்றின் வலி அறிந்தேன்.
கதையினூடே வரலாறுகளையும், செய்திகளையும் அறிந்து கொண்டமையில் மகிழ்ச்சி. தங்களால் தமிழும், தமிழால் தாங்களும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள். நன்றி.
இப்படிக்கு தங்கள் வாசகன்
கி.மனோகரன்.