பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கும்... ஆண்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும்’ தமிழ்மகனால் சமர்ப்பிக்கப்பட்ட இந்நூல், எவ்வகையில் அந்த சமர்ப்பணத்தை நியாயப்படுத்துகிறது என்பது, இறுதி அத்தியாயம் வரை நீளும் சஸ்பென்ஸ்.
இந்தக் கதைக்கு ரோஷோமான் பாணியில் கதை சொல்லும் வடிவத்தை அமைத்திருக்கிறார் ஆசிரியர். முதல் பாகம் முழுக்க சொல்லப்படும் அதே கதைதான், இரண்டாம் பாகத்திலும். அதே காட்சிகள், கிட்டத்தட்ட வசனங்களும் கூட அதே. விருமாண்டி மாதிரியேதான். விருமாண்டியிலாவது கேமிரா கோணங்களில் வித்தியாசம் காட்டமுடியும். இது அச்சில் இருக்கும் நாவல். இங்கேதான் தமிழ்மகனின் சாமர்த்தியம் மிளிருகிறது. ஒரே கதையை திரும்பப் படிக்கும் அலுப்பு சற்றுக்கூட ஏற்பட்டுவிடாத வகையில் மொழியை லகான் பிடித்து கட்டுப்படுத்துகிறார்.
இரண்டு பாகங்களுக்கும் தலா இருபது அத்தியாயங்கள். இருவருக்கும் மனப்பிளவு மனநோயின் காரணமாக என்றே முப்பத்தி ஒன்பதாவது அத்தியாயம் வரைக்கும் நினைத்துக் கொண்டிருக்க, ஒரே ஒரு பத்தியில் போகிறபோக்கில் கொளுத்திப்போடும் ஒரு மேட்டரில் கதையின் ஆதாரத்தன்மையே யூ டர்ன் அடிக்கிறது. மிக முக்கியமான இந்த சஸ்பென்ஸை கூட வெளியீட்டுவிழாவில் ஒரு பெண்கவிஞர் சூறைத்தேங்காய் உடைப்பது மாதிரி போட்டு உடைத்துவிட்டார். மனம் பிறழ்ந்த பெண் மனம், பெருந்தன்மையான ஆண் மனம் என்று ஆணாதிக்கப் பார்வையில் கதை எழுதிவிட்டாரே தமிழ்மகன் என்று ஆரம்பத்தில் ஏற்பட்ட கோபம் முழுக்க இறுதியில் கரைந்து, உருகிப் போய்விடுகிறது.