குணா கவியழகனின் விடமேறிய கனவு. சாட்சியம் இன்றி அழிக்கப்பட்ட ஒரு இனத்தின் இனப்படுகொலை யுத்தத்தின் சொல்லப்படாத அவலங்களின் பக்கங்களை வலிகள் குன்றாமல் எடுத்து வந்திருக்கும் இந்த காலத்தின் அற்புதமான போர் இலக்கியம்! நாவலின் முன்பாகம் கதை சொல்லியின் அனுபவங்களை கோர்த்து இரத்தம் உறைய வைக்கும் சிங்கள இராணுவத்தின் சிறைச்சாலை சித்திரவதை விசாரணை கொடுமைகளை கண்ணீர் பெருகி ஓடும் வகையில் சொல்கின்றது.
கைதிகளான போராளிகளின் மன உணர்வு போராட்டங்கள் சித்திரவதை வலிகளை சொல்லு சொல்லாக சமகாலத்தில் கண் முன்னே கொண்டு வந்து வலிகளை துல்லியமாக உணரும் வகையில் துன்பம் தோய்த்து சொல்லும் திறன் மிக சிறப்பானது. தத்துவார்த்த சிந்தனைகள் பரவலாக நூலை மனதோடு இருத்தி வலித்தாலும் மூடி வைக்காமல் தொடர்ந்தும் படிக்க வைக்கின்றது.
அத்தோடு சித்திரவதைகள் தலை சுற்ற வைக்கும் விசாரணை கொடுமைகள் அவற்றுள் இருந்து தப்பி பிழைக்கும் போராட்டம் என கதையோடு இம்மியளவும் தள்ளி நிற்காமல் நாமும் காட்சிகளுள் பயணிக்கும் திகில் உணர்வை தருகின்றது. இது புனைவுக் கதையாக இருக்க முடியாது. உண்மையின் பதிவுகள் எனவே மனம் உறுதியாக நம்புகின்ற போதிலும் கதை சொல்லியின் புனைவு திறனும் அங்காங்கு தன் பார்வைகளை புகுத்தி இது புனைவு தான் என எண்ண வைக்கின்றன.
எது எவ்வாறாயினும் இது முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை யுத்தத்தின் பல உண்மைகளை எடுத்தியம்பும் ஒரு போர் இலக்கிய நூலாக பார்க்கப்பட முடியும். பல உண்மைகளையும் இந்த கதை சொல்லியூடாக படைப்பாளி ஆவணப் படுத்தி இருக்கின்றார் என்பதற்கு மறுப்பும் இல்லை.
காலத்தின் தேவையான பதிவு. ஒவ்வொரு தமிழனும் படிக்க வேண்டிய போர் இலக்கியம். ” விடமேறிய கனவு” தரமான சமகால போர் இலக்கியம் என்பதில் மிகை இல்லை. ஆனாலும் தத்துவார்த்த சிந்தனைகளூடாக படைப்பாளியின் பார்வைகள் மேலோங்கி இருக்கின்றது.. அவை உண்மைகளாக இருக்கலாம். ஆனால் பன்முக விளக்கங்கள் இன்னமும் எடுத்துவரப் பட்டு இருக்கலாம் சில சில இடங்களில்.
சாட்சியம் இன்றி அழிக்கப்பட்ட எம் ஈழத்து தமிழினத்தின் முள்ளிவாய்க்கால் இனப் படுகொலை யுத்தத்தின் பின் கைதான கைதிகளுக்கும் போராளிகளுக்கும் என்ன நடந்தது என்ற காத்திரமான பார்வையை குணா கவியழகனின் ” விடமேறிய கனவு” ஆவணப்படுத்தி இருக்கும் என்ற உறுதியான நம்பிக்கை நூலைப் படிப்பவர்க்குள் எழாமலும் இல்லை.