இந்த நாவலைப் பற்றி ஒரு அபாரமான விளக்கம் எழுதி இருக்கிறார். இந்த நாவலை எப்படி எப்படி எல்லாம் வாசிக்கலாம் என்று எழுதி இருப்பது அருமை! அவர் சொல்வது போல நாம் இந்த கதையை கங்காவின் கண்களின் ஊடாகவே பார்க்கிறோம். கங்காவின் பார்வையிலும் ஒரு bias இருக்கும் என்பதை நினைவு கொள்ளும்போது கதை வேறு தளத்துக்கே போய்விடுகிறது. அப்படி நினைவு வைத்துக்கொள்வது ஜெயகாந்தனின் எழுத்துத் திறமையால் கஷ்டமாக இருக்கிறது என்பது வேறு விஷயம். கங்கா சீதையின் மறுவடிவம் என்பதும் எனக்கு சரியாகத்தான் இருக்கிறது. கங்கா கற்பிழந்தவளாயிற்றே, சீதை கற்புக்கரசி ஆயிற்றே என்று யோசிக்காதீர்கள், அவர்களுக்கு அவர்கள் வாழ்க்கை ஆண்களிடம் என்ன உறவு என்பதை நினைத்துப் பாருங்கள். சமூகத்தின் பார்வையில் – ஹனுமான், லக்ஷ்மணன் உட்பட – சீதை இல்லாத ராமனுக்கு ஆளுமை உண்டு, ராமன் இல்லாத சீதை இல்லை. கங்காவுக்கும் அப்படித்தான் ஆகிறது – பிரபு இல்லாத கங்காவாக அவள் வாழ்வது கஷ்டம், வெறுமைதான் மிஞ்சும், அதை அவளும் உணர்ந்துதான் “கான்குபைனாக” இருக்கவும் தயாராகிறாள். அந்த வெறுமையைத் தாண்ட அவளால் முடியவில்லை.
ஜெயமோகன்