பாலபாரதியின் கதைகளில் காணக்கிடைக்கிற விவரணைகள் மிக நுட்பமானவை. இவருக்கு சொல்வதற்கு நிறைய விஷயம் இருக்கிறது. ஒரு இடத்தை விவரிக்கும் போதே உடன் பயணிக்கிற உணர்வு நமக்கும் ஏற்பட்டு விடுகிறது. ‘நகரம்‘ என்ற கதையில், பொங்கல் வீடு எனப்படும் தங்குமிடத்திலிருந்து வெளியே வந்து நடக்கத் தொடங்குகிற கதை நாயகனை விவரித்துக் கொண்டே வரும்போது அப்பகுதியின் அவலமான சூழல், வேலை செய்கிறவர்களின் நிலை என எல்லாவற்றைப் பற்றியும் ஒரு சித்திரமும், அனுதாபமும் நமக்குள் ஏற்பட்டு விடுகிறது.
அதேபோல ‘சாமியாட்டம்‘ கதையில் ‘டண்டக்கும் டண்டக்கும்.. டின்.. டின்..‘ என பறையொலி ஒரு இதமான இசையோட்டமாக ஆரம்பிக்கின்ற சாமியாடியின் ஊர்வலத்தை சொல்லிக்கொண்டே வந்து, நிறைவடையும் நேரத்தில் அதே ‘டண்டக்கும் டண்டக்கும்.. டின்.. டின்..‘ என்ற வார்த்தைகளை உச்சத் தொனியில் நம்மை உணரச் செய்து விடுகிறார்.