இது த்ரி இன் ஒன் நாவல். ஒரு டிராக், சமகாலத்தில் நிகழ்வது. ரெட் மார்கெட், மருத்துவ உலகின் அவலம் ஆகியவற்றை தமிழக நக்சல்பாரிகளின் வரலாற்றுடன் இந்தப் பகுதி விவரிக்கிறது.
தோழர்கள் தமிழரசன், ரங்கராஜன், கதிர் ஆகியோருடன் வால்டர் ஏகாம்பரம், இளவரசன், திவ்யா, சந்தன கடத்தல் வீரப்பனின் கூட்டாளியான தங்கப்பன், டாக்டர் தேன்மொழி, ஸ்காட் வில்லியம்ஸ்... என பல கதாபாத்திரங்களும், 1980 - 84 காலகட்டத்தில் நக்சல்பாரி தோழர்கள் என்கவுண்ட்டர் செய்யப்பட்ட நிகழ்வும், பிணைக்கைதியாக ஒரு வெளிநாட்டவரை சத்தியமங்கலம் காட்டுக்கு கடத்திய எபிசோடும், தர்மபுரியில் மூன்று கிராமங்கள் எரித்து சூறையாடப்பட்ட சம்பவமும் இந்தப் பகுதியில் இடம்பெறுகின்றன. இதற்கு நேர் மாறான சரித்திர பகுதி, இரண்டாவது டிராக். தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனின் தொடக்கக்கால வரலாறு கற்பனை கலந்து சொல்லப்பட்டிருக்கிறது.
மூன்றாவது டிராக், முழுக்க முழுக்க ஃபேன்டஸி. மந்திரவாதி தாத்தாவால் கடத்தப்பட்ட ராஜகுமாரியை எப்படி மகேஷ் என்னும் சிறுவன் மீட்கிறான் என்பதுதான் இந்த போர்ஷன். விக்கிரமாதித்த மகாராஜா, வேதாளம், அலாவுதீன், ஸ்பைடர் மேன், ஹாரி பார்ட்டர், காட்ஸில்லா, சூனியக்கார பாட்டி... என பலரும் தங்கள் பங்களிப்பை இந்த பகுதியில் செய்திருக்கிறார்கள். இது தவிர நான்காவதாக ஒரு டிராக் உண்டு. மகாபாரத காலத்தை சேர்ந்தவர்கள் பங்குபெறும் பகுதி இது. இறுதி வரை ஒன்று சேராத இந்த நான்கு டிராக்குகளும் தனித்தனி மொழி நடையில் எழுதப்பட்டிருக்கின்றன.