குதிரை இல்லாத ராஜகுமாரன்
ஈழத் தமிழன் தன் இருப்புகளைத் தொலைத்துவிட்டு இருப்பவற்றைக் கட்டிக்காப்பாற்றிக் கொள்ளத் தனக்கென்று ஓர் முகமூடியை அதுவும் அரை விலைக்கு வாங்கி அணிந்துகொண்டு உலகம் முழுக்க அங்கலாய்த்துக் கொண்டு திரியும் காலமிது. நாட்டை இழந்து, மொழியை மறந்து, உறவுகளைப் பிரிந்து இழக்க ஒன்றுமே இல்லாத நிலையில் வெளிநாட்டுத் தமிழர் தாம் வாழ்வை நினைக்காமல் வேரறுந்த விழுதுளாய் வாழத் தொடங்கிய புலம்பெயர் வாழ்வில் குன்றின் விளக்காய்ச் சில மனிதர்கள் .ராஜாஜி அவர்களைப்போல் வாழத்தான் செய்கின்றார்கள்.
தன்னைப் பலவீனப் படுத்தியாவது மற்றவர்களின் பலத்தை முன்னுக்குக் கொண்டுவரும் ஆற்றல் மிக்கவர் நண்பர் ராஜாஜி அவர்கள் என்பதனை அவரது எழுத்துகளில் மட்டும் அல்ல நேரடி வாழ்விலும் கடைப்பிடிப்பவர் என்பதனைப் பலவடிவங்களில் பலரிடம் வெளிப்படுத்தி இருப்பதைப் பார்த்துள்ளேன். 40 வருட அவரது இலக்கிய வாழ்வில் 4 வருடங்களுக்குக்குறைவாகவே என்னுடன் அறிமுகமாகியவர் இந்த நூலாசிரியர்.