கலங்கிய நதி
ஆசிரியர் – பி.ஏ. கிருஷ்ணன்
பி.ஏ. கிருஷ்ணன் எழுதிய இரண்டாவது நாவல் கலங்கிய நதி. இதை எழுதிய நாவல் என்பதா? அல்லது மொழிபெயர்த்த நாவல் என்பதா? காரணம், பி.ஏ. கிருஷ்ணன், முதலில் ஆங்கிலத்தில் எழுதி வெளிவந்த பிறகு, அவர் நாவலை அவரே தமிழில் எழுதியது வெளிவருகிறது.
நாவல் ஆரம்பித்து நான்கைந்து பக்கங்கள் போனவுடன் நாவலிலிருந்து இன்னொரு நாவல் விரிகிறது. அதாவது நாவலுக்குள் நாவல் என்ற போஸ்ட் மாடர்னிசத் தன்மை.
மின்வாரியப் பொறியாளர் ஒருவரை அஸாம் தீவிரவாதிகள் கடத்திச் சென்று, பிணைக் கைதியாக வைக்கிறார்கள். அவரை மீட்கச் செல்கிறார் நாயகன். இதுதான் நாவலின் மையம்.
இந்த மையத்தை அவ்வப்போது கலைத்து அவரின் சுய வரலாற்றுத் தகவல்களும் இடைஇடை வருவதும், ஒன்றை விளிம்புக்குத் தள்ளுவதும், மற்றொன்றை மையத்துக்குத் தள்ளுவதுமான ஆட்டம் கலங்கிய நதி நாவல்.
எளிய வாசிப்புக்கு உகந்த நடை. நாவலின் மையப் பாத்திரம் ஒரு நேர்மையான மின்வாரிய அதிகாரி. காரணம், அவன் அப்பா ஒரு காந்தியவாதி. அந்தக் காந்தியவாதியின் மகன் செய்யும் ஒவ்வொரு நடவடிக்கையும் நாவலின் எல்லாப் பக்கங்களையும் இணைக்கிறது. காந்தியவாதி அப்பாவின் அதிகபட்ச ஆசை தில்லியில் இருக்கும் காந்தி சமாதியைப் பார்ப்பதுதான். காந்தியவாதியின் வளர்ப்பில் வளர்ந்த மகனும் காந்தியின் சாயலில்தான் வளர்கிறான் என்பது நாவலில் பிடிபடாமல் இருந்தாலும், நாவல் முடிந்த பின் இவற்றை இணைத்துப் பார்க்கலாம். நாவலின் நாயகனும் காந்தியின் சாயல் என்பது உறுதியாகிறது. அதாவது காந்தி முதல் காந்தி; இரண்டாவது காந்தி நாயகனின் அப்பா; மூன்றாவது காந்தி நாயகன்.
மொத்தமாக யோசித்தால் ஒரு பெரிய கடத்தல் கும்பலைத் தனியொருவனாகச் சந்தித்து அதிகாரியை மீட்டு வருவதும், அமைச்சர்கள், அதிகாரிகள், ஒப்பந்ததாரர்களோடு போராடுவதன் பின்னணியில் கதாநாயகனின் பிடிவாதம் வெற்றி பெறுகிறது.
இந்தப் பிடிவாதம் காந்தியின் பிடிவாதம். ஒரு கட்டத்தில் தோற்கும்போதுகூடப் பிறர் நாயகனுக்குத் துணையாக நிற்கிறார்கள் என நினைக்க வைக்கிறது.
அந்தப் பிடிவாதத்தால் பொய்மைகள் அவனிடம் தோற்கின்றன. இந்த மூன்றாவது காந்தி போலவே இந்த நாவல் மூன்று லேயர்களில் கட்டமைக்கப்பட்டுள்ளது. முதலில் ஒரு கதையின் கதை தொடங்குகிறது. இரண்டாவது கதைக்குள் எழுதப்படுகிற நாவல். அது பிரசுரத்துக்குப் போகிற தேர்வு விஷயங்கள். மூன்றாவது மொத்த நாவலையும் எழுதுவது பி.ஏ. கிருஷ்ணன். ஆக மூன்று காந்திகள். மூன்று நாவல்கள்.
நாவலில் வருகிற ஏராளமான ஆங்கிலக் கவிதைகளின் சிலாகிப்புகள் தமிழில் கொஞ்சம் துருத்தல்தான்.
புலிநகக்கொன்றை வாசித்த வாசகர்களின் கவனிப்பில் பி.ஏ. கிருஷ்ணன் தொடர்ச்சியாக என்ன செய்து கொண்டிருக்கிறார்? அந்த நாவலிலிருந்து எவ்வளவு தொலைவு நகர்ந்து வந்திருக்கிறார் என்பதையெல்லாம் கவனிக்க முடியும்.