இந்த நாவலில் உலாவரும் கதாநாயகி மைதிலி, ஒரு மராத்திய டாக்டருக்கும் தமிழ் நர்ஸுக்கும் பிறந்த கலவை, கதை நெடுகிலும் தமிழ் மற்றும் மராத்திய
வாழ்க்கை, கலாச்சாரம், சூழ்நிலை, பண்பு போன்றவை பின்னிப் பிணைந்திருக்கின்றன. இப்பூமியில் தான் எந்தவித தடைகளும் இல்லாமல் சுதந்திரமாக
வாழணும் என்பதற்காக வாழ்நாள் முழுதும் போராடி வெற்றி காண விழைகிறாள். நடுநடுவே ஆங்கிலம் மற்றும் மராத்திய இலக்கியத்தில் ஈடுபாடும்
நாடக உலகில் சற்றே நுழைந்தும் வருகிறாள். இவளுடன் கூட வரும் அம்மா, அத்தை ஷந்தனு, அன்ஷுமன், மிலிந்த், தர்மராஜன், பத்மநாபன்
மற்றும் கதீர் போன்ற பாத்திரங்கள் கதையின் நீரோட்டத்தை அதிகரிக்கிறார்கள். மாறுபட்ட மொழி கலாச்சாரம், சூழ்நிலை இவைகளைக்
கலந்து இந்த சமூகக் கதையை சுவைபட எழுதி, வாசகர்களைக் கவருகிறார் இதை எழுதின ஆஷா பகே.
74 வயதாகும் ஆஷா பகே, எம்.ஏ. படித்தவர், நாகபுரி வாசம். சென்ற 35 வருடங்களாக மராத்தியில் எழுதி பிரபலமானவர். இவரின் 13
சிறுகதைத் தொகுதிகள், 6 நாவல்கள் மற்றும் பல கட்டுரைத் தொகுதிகள் பிரசுரமாகி இருக்கின்றன. ஏராளமான அரசு மற்றும் இலக்கியப் பரிசுகளைப்
பெற்றிருக்கிறார். இவருடைய சிறுகதைகள் மற்ற இந்திய மொழிகளிலும், “பூமி” நாவல் இந்தி மற்றும் குஜராத்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன.
மேலும் இந்த நாவல் 2007ல் சாகித்திய அகாதெமி விருது பெற்றதாகும்.
இதனை மொழிபெயர்த்த பி.ஆர். ராஜாராம் 1969 முதல் எழுத்துத் துறையில் ஈடுபட்டு வருபவர். இவருடைய கட்டுரை, மொழிப்பெயர்ப்புகள்
பல பத்திரிகைகளில் பிரசுரமாகி இருக்கின்றன. ஏற்கனவே இவருடைய மொழிபெயர்ப்பில் ‘ மராத்தி சிறுகதைகள் ‘ என்கிற நூலை சாகித்திய அகாதெமி 1979ல்
வெளியிட்டிருக்கிறது.