அவஸ்தை
யு. ஆர். அனந்தமூர்த்தி
தமிழில்: தமிழவன்
இன்று எங்குப் பார்த்தாலும் இந்தியப் பாரம்பரியத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பவர்கள் மோதலில் ஈடுபடுகிறார்கள். மாறாக, பாரம்பரியம் என்பது இன்னும் ஆழமான அறிதலுக்குரியது என்ற விவாதத்தைத் தொடங்குகிறது இந்த நாவல்.
கிருஷ்ணப்பன் என்ற மையப் பாத்திரத்தைச் சுற்றியது இப்புனைவு. இடதுசாரி அரசியலையும் இந்தியப் பாரம்பரியத்தையும் புதுவிதமாக இணைக்கிறது. உள்பிரதியில் இருத்தலியலும் மாடர்னிசமும் புது இழைகளாகப் பின்னிப் பிணைந்துள்ளன. கிருஷ்ணப்பனின் குருவான அண்ணாஜி என்ற அண்டர் கிரௌண்ட் கம்யூனிஸ்ட், பல பெண்களோடு சரளமாகப் பழகுகிறவன்; இறுதியில் சுவாமியார் வேடத்தில் என்கௌண்டரில் சுட்டுக் கொல்லப்படுகிறான். மனசாட்சிக்கு மாறாக என்றும் நடக்காத கிருஷ்ணப்பன் கேவலமாய் மனைவியோடு சண்டைபோடுகிற அரசியல்வாதி. ஆனால் கௌரி தேஷ்பாண்டே என்ற இளமைக்கால சிநேகிதியின் பெண்விடுதலைக் கருத்தியலை மதிக்கிறவன். இந்த வினோதமான முரண்பாட்டை நாவல் எதற்கு உருவாக்குகிறது? காதல், தனிமனிதவாதம், காமம், புரட்சிகர அரசியல், மலைமீது இருக்கும் பைராகி ஒருவனின் அமானுஷ்ய சக்தி என எதிர்பார்க்க இயலாச் சரடுகளை நாவல் தத்துவக் களத்தில் ஆடுபுலியாட்டமாக்கி வாசகர்களைத் திக்பிரமைக்குள்ளாக்குகிறது.
இப்போது புதுவகையில் மெருகூட்டப்பட்டு, தமிழவன் மொழிபெயர்ப்பில் வெளிவருகிறது.