சங்ககாலத்தில் பதினெட்டுக்கும் மேற்பட்ட பாண் சமூகத்தார் ஐந்திணைகளிலும் சுற்றித் திரிந்து கலைச்சேவை செய்தார்கள்.
சமகாலத்தில் பூம்பூம் மாட்டுக்காரர், ஜாமக்கோடங்கி, சாட்டையடிக்காரர், பகல்வேடக்காரர் போன்ற முப்பதுக்கும் மேற்பட்ட நாடோடிச் சமூகத்தார் தமிழகத்தில் எவ்வாறு ஊர்சுற்றும் வல்லுநர்களாகப் பங்காற்றுகிறார்கள் என்பதை இந்த நூல் காட்சிப்படுத்துகிறது. இதன் மூலம் சங்ககாலம் தொடங்கி சமகாலம் வரை நாடோடிகளின் பங்களிப்பு பற்றிப் பேசுகிறது. நாடோடிகளும் நாடோடியமும் தமிழ் மரபில் பிரிக்க முடியாதவை. இது குறித்து 22 இயல்களில் விவாதிக்கப்படுகின்றன.
நாடோடியமானது கிராமங்களில் நகரியத்தையும் நகரங்களில் கிராமியத்தையும் கொண்டு சேர்க்கிறது. சிறுமரபுகளையும் பெருமரபுகளையும் இணைக்கும் பண்பாட்டுப் பாலமாகச் செயல்படுகிறது. இவற்றின் பன்முகத்தன்மைகளை இந்த நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் காட்சிப்படம் போல் கண்டுணரலாம்.
ிராமங்கள் தன்னிறைவு பெற்றவையல்ல; தற்சார்பு பெற்றவையும் அல்ல. கிராமங்களின் நிலைகுடிகளுக்கு நாடோடிகளான அலைகுடிகள் செய்யும் கலைச்சேவையால் எவ்வாறு கிராம வாழ்வு முழுமை பெறுகிறது என்பதைக் களப்பணித் தரவுகள் மூலம் இந்த நூல் நிரூபிக்கிறது.
ஆதரவுச் சமூகத்தாரை அண்டி வாழும் மிதவைச் சமூகமான நாடோடிகள், நவீனகாலப் புலப்பெயர்வு சிக்கல்களுக்கு எவ்வாறு வழிகாட்டுகிறார்கள் என்பதையும் விவாதிக்கிறது. இதன்மூலம், சமூக அறிவியல் களத்தில் தனியொரு நூலாக முதன்மை பெறுகிறது.