குடந்தை நகர்ப் புலவர் கோவே வாழ்க! குடந்தை நகர்க் கலைஞர் கோவே" என்று தமிழ்க்கடல் உவே சா அவர்களின் ஒப்பற்ற புகழைப் பாரதியார் போற்றினார். குடந்தை நகர்ப் புலவர் கோவே - என்று பேராசிரியர் இராம.குருநாதனைப் பாரதியார் தொடரில் பாராட்டி மகிழ்கிறேன். சிந்தனையாளர் - சீர்திருத்தவாணர் - பெரும் பேராசிரியர்- புனைகதையாளர் கவியரசர் - நாடகச்செம்மல்- சால்புத்திலகம் எனப் பேராசிரியர் புகழ் பாடுவதற்குச் சொற்கள் இன்னும் காத்திருக்கின்றன. கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி-யாக அங்கிங்கெனாதபடி எங்கும் சென்று தமிழ் வளர்ச்சிக்குத் தன்னை ஆட்படுத்திக் கொண்டவர். எளிமைக்கு எவ்வளவு பெரிய வலிமை என்பதைப் பேராசிரியரிடம் தான் பிறங்கிடக் கண்டேன், ஆழ்ந்த புலமை கனிந்த திறத்தால் அரிய ஆங்கிலக் கவிதைகளை மொழி பெயர்த்து அவர் வழங்கிய அளிப்பும் மகுடத்தில் ஒளிவீசும் மாணிக்கமாகும்.
ஒருவிரல் கவிதையெழுதும் - அடுத்த விரல் வரலாறு எழுதும் - மறுவிரல் காவியம் செய்யும் நடுவிரல் நாடகம் புனையும் கட்டை விரல் கட்டுரைகளை வரையும் என ஐந்து விரல்களையும் சேர்த்துப் புலமைச் செழுமையில் வெற்றிக்கொடி ஏந்துகிறார். நல்லிசைப்புலமை நம்பியாகத் திகழும் பேராசிரியர் இராம.குருநாதன் தமிழக அரசிடமிருந்து சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது பெற்றது தகுதிக்கு அமைந்த கவிகையாகும்.
நீண்ட தமிழால் நிமிர்ந்த புகழ் ஒளிர நீடு வாழ்க!.
அன்போடு
ஔவை நடராசன்
No product review yet. Be the first to review this product.