மாத்தன் மண்புழுவின் வழக்கு
மலையாள எழுத்தாளர் சிவதாஸ் எழுதிய புத்தகத்தின் மொழிபெயர்ப்பு இது. தமிழ் குழந்தைகள் இலக்கியத்தின் சிறந்த புனைகதை ஆசிரியரான யூமா.வாசுகி, மொழிபெயர்த்துள்ளார்.மாத்தன் என்ற மண் புழுவை மையமாக வைத்து, சிறுவர்களுக்கான நாவலாக எழுதப்பட்டுள்ளது. பூமியின் குடல் தான் மண் புழு. மாத்தன், தனக்கு விவசாய தொழிலாளர் ஓய்வூதியம் தர வேண்டும் என, அரசிடம் கோரிக்கை வைக்கிறது. அரசு அதை தள்ளுபடி செய்கிறது. மாத்தன் நீதிமன்றத்தை அணுகுகிறது. இறுதியில் என்ன ஆனது என்பதே, நாவலின் முடிவு. உயிரியலை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட இந்த நாவல், மண்ணையும், விவசாயத்தையும் நமக்கு காட்டுகிறது. கற்பனையான நாவலில், சிறுவர்களுக்கு என்னென்ன சொல்ல முடியுமோ, அதற்கான அனைத்து சாத்தியங்களையும் இந்நூல் கொண்டிருக்கிறது.எளிய கதை தான்; அதற்குள் பல்வேறு சம்பவங்கள்; நடைமுறை பிரதிபலிப்பு என, சிறுவர்களை உற்சாகமூட்டும் நாவலமாக அமைந்துள்ளது. சிறுவர்களை வாசிப்பு பழக்கத்தில் ஈடுபடுத்த விரும்பும் பெற்றோர் இதை, பரிசீலினைக்கு எடுத்துக் கொள்ளலாம்.