1990 ஆம் ஆண்டு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய நாவல் போட்டியில் ‘ கடை ‘ நவலுக்கு மூன்றாம் பரிசு கிடைத்தது.
முதல் மற்றும் இரண்டாம் பரிசு வாங்கிய நாவல்களைவிட வாசகப் பரப்பைப் பெரும் அளவில் சென்றடைந்திருக்கிறது இந்நாவல். அதை வாசித்தவர்கள்
இன்றளவும் புளகாங்கித்தோடு பேசுவதை என்னால் கேட்க முடிகிறது. சாலையோர வியாபாரியைப் பற்றி தமிழில் எழுதப்பட்ட முதல் நாவல்
இதுவாகத்தான் இருக்கும்.
ஒரு தள்ளு வண்டிக் கடைகாரனின் வாழ்வையும் மன உணர்வையும் சித்தரிக்கும் படைப்பு இது. அநேகமாக எனது சொந்த வாழ்வின் பிரதிபலிப்பு.
சந்திரன் படும் அவஸ்தைகள் அவனுக்குப் புது ஞானத்தை தருகிறது. இணைந்து இயங்கும் தொழிலாளிகள், தொழில் முனையும் பெரும் முதலாளிகள்
எல்லாருக்குமே ஊதியமும் ஓய்வும் போதுமான அளவு கிடைக்கிறது. தொழிலாளிகளுக்கு முழுமையான ஊதியம் வழங்கப்படுவதில்லை என்றாலும்
எட்டு மணிநேர ஓய்வு உத்திரவாதப்படுத்தப் பட்டிருக்கிறது. சந்திரன் போன்ற விற்பனையாளார்களுக்கு அது வாய்க்கவில்லை. 15 மணி நேரமும்
உழைக்கும் உடல் சில மணிநேர ஓய்வுக்காக ஏங்குகிறது. அது கிடைக்குமா? கிடைக்கவேண்டும். கிடைக்க என்ன செய்வது ? அனைத்தும் அரசுமயமாக
வேண்டும் . மனிதர்கள் எல்லாரும் உழைத்து உறங்கி, ஒய்வெடுக்கும் உரிமை பெறவேண்டும்.
கடை நாவலின் சித்தரிப்பு, இந்தக் குறிக்கோளை நோக்கியே பயணப்படுகிறது. அந்த இலக்கு அடையப் படும் வரை நாவலின் தேவை இருந்து
கொண்டே இருக்கும் .