எனக்கு நிலா வேண்டும் :
இந்த நாவல் ஆசிரியர் சுரேந்திர வர்மா நவீன ஹிந்தி இலக்கிய மரபின் பிற்பகுதியைச் சேர்ந்த விரல் விட்டு எண்ணதக்க எழுத்தாளர்களில் ஒருவர். 1941-ல் உத்திரப் பிரதேச மாநிலம் ஜான்சியில் பிறந்த இவர் நவீன நாடகாசிரியர்களில் சிறப்பான இடத்தைப் பெறுகிறார். 1992- சங்கீத நாடக அகாதெமி விருதைப் பெற்ற இவருடைய புகழை ஒரு நாவலாசிரியர் என்ற வகையிலும் நிலை நாட்டிய படைப்பு ” எனக்கு நிலா வேண்டும்” . 1996-ல் இதற்கு சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது.
இந்த நாவலைக் குறித்து எழுதும்போது புகழ் பெற்ற விமரிசகர் ஷ்யாம் கஷ்யப் நாவலாசிரியரைக் குறித்துக் கூறும் கருத்து குறிப்பிட்த்தக்கது. “வாழ்வியல் உண்மைகளை மிக ஆழ்ந்து நோக்கி அவற்றின் நுண்ணிய விவரங்களை தன் கனல் படைப்பில் ஆக்கப்பூர்வமாகப் பதிப்பதிலும் படைப்பின் மொழி தொடங்கி அதன் நடை வரை ஹிந்திமொழிக்கு ஒரு புதிய பரிமாணத்தைத் தருவதிலும் அவருடைய வாழ்வியல் நோக்குகள் சுரேந்திர வர்மாவை ஐயத்திற்கிடமின்றி ஒரு மிகச் சிறந்த எழுத்தாளராகவும், திறன்மிக்க படைப்புக் கலைஞராகவும் நிலைநிறுத்துகின்றன”.
’ எனக்கு நிலா வேண்டும்’ என்ற இந்த நாவல் ஒரு லட்சிய நடிகையின் போராட்டக் கதை. அவளுடைய போராட்டம் ஒரு இருமுனைப் போராட்டம் கதாநாயகி வர்ஷா வசிஷ்ட ஒரு பெண் என்ற முறையில் தன் குடும்ப – சமூக அமைப்புகளோடும், கலை உலகின் பிரதிகூலமான சூழல்களோடும் போராட நேர்கிறது. ஒரு நடிகை என்ற முறையில் அவள் தன் அறிவாலும், கலைத்திறனாலும் கலை உலகின் சவால்களை எதிர்கொண்டு வெற்றி சிகரத்தை அடைய முயற்சி செய்கிறாள். இவற்றுடன் கதாநாயகி வர்ஷா வசிஷ்டிற்கும் அவளுடைய காதலன் ஹர்ஷவர்தனுக்கும் இடையே நிகழும் போராட்டங்களும் இணைந்து இந்தப் போராட்டக் கதையை நிறைவு செய்கின்றன. அடைய இயலாத ஒன்றை அடையும் முயற்சியில் ஹர்ஷவர்தனைப் போன்ற திறன்மிக்க நவநாகரீக கலைஞனும் தற்கொலை செய்துகொள்கிறான். ஆனால் இதே முயற்சியில் ஷாஜஹான்பூர் என்ற பிந்தங்கிய பகுதியில் இருந்து வந்த வர்ஷா வசிஷ்ட் தந்திறன், ஆர்வம், அறிவு, வினயமான குணம் ஆகியவற்றின் துணை கொண்டு வெற்றி அடைகிறாள். வானில் உச்சி நிலையைத் தொட்டுவிடுகிறாள்.
இந்த நாவலை ஹிந்தி மூலத்திலிருந்து மொழி பெயர்த்த பேராசிரியர் எம்.சுசீலா மொழியியல் முனைவர் பட்டமும் ஹிந்தி இலக்கியத்தில் முதுகலைப் பட்டமும் பெற்று தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறையில் பேராசிரியராக பணி பரிந்து ஓய்வு பெற்றவர். மொழி ஆய்வு, மொழிவரலாறு, மொழி பெயர்ப்பு, நடையியல் ஆகியவை இவருடைய ஆர்வக்களங்கள்