மரபான நாவல்களுக்குரிய வடிவமும் கருப்பொருளும் கொண்டது தோப்பில் முகமது மீரானின் அஞ்சுவண்ணம் தெரு . ஒரு தெருதான் கதைக்களம். அந்தத்தெருவில் வாழும் பலவகையான மனிதர்களின் வாழ்க்கைபற்றிய ஒன்றோடொன்று பொருந்தும் உதிரிச்சித்தரிப்புகள்தான் கதை. காலமாற்றத்தில் அந்தத்தெருவுக்கு என்ன ஆகிறது என்பதுதான் கரு. ஆனால் உயிரோட்டமுள்ள ஒரு இலக்கிய ஆக்கமாக இருக்கிறது இப்படைப்பு. உயிரோட்டம் என்னும்போதே நுட்பம், வளர்ந்துகொண்டே இருக்கும் இயல்பு இரண்டும் சுட்டப்பட்டுவிடுகின்றன. நல்ல கலைப்படைப்பின் இயல்பு அது. அஞ்சுவண்ணம் தெரு அதன் கதாபாத்திரங்களின் உறவுகளுக்குள் விடப்படும் மௌனங்களையும் காலமாற்றம் மூலம் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் கொள்ளும் வளர்சிதை மாற்றங்களையும் கணக்கில் கொள்ளும் வாசகர்களின் ரசனையில் சுருளவிழ்ந்துகொண்டே இருக்கும்.