பொருட்செல்வத்தை வாரி வழங்கினால் தான் வள்ளலா? அருட்செல்வத்தை அள்ளிக் கொடுத்தாலும் வள்ளல் தான். வடநாட்டில் தோன்றிய ராமகிருஷ்ணரும், தென்னாட்டில் தோன்றிய திருவருட் பிரகாச வள்ளலாரும் அருட்செல்வத்தை வாரி வழங்கிய வள்ளல்கள் ஆவர். ஷ்ரீ ராமகிருஷ்ணரி ன் அமுதவாக்குகள் மனிதனைச் செம்மைப்படுத்தும் ஆற்றல் கொண்டவை போலவே, அருட்பிரகாச வள்ளலாரி ன் திருவருட்பாவுக்கும் அத்தகு ஆற்றல் உண்டு என்று கூறலாம்.இம்மூ ன்று தொகுதிகளும், வள்ளலாரின் திருவருட்பா முழுமைக்கும் எளிய, இனிய உரை விளக்கமாக அமைந்துள்ளன. முதல் தொகுதியில் முதலிரண்டு திருமுறைகளும்,இரண்டாம் தொகுதியில் அடுத்த மூ ன்று திருமுறைகளும், ஆறாம் திருமுறை மூன்றாம் தொகுதியாகவும் வெளியிட்டுள்ளனர்.நூலின் தொடக்கத்தில் வள்ளலாரின் வரலாறு சுருக்கமாகவும், மிக அருமையாகவும் கூறப்பட்டுள்ளது. விண்ணப்பக் கலிவெண்பாவில், உரையாசிரியர், காவிரி வடகரைத் தலம், ஈழ நாட்டுத் தலம், பாண்டிய நாட்டுத் தலம் என்று தலவாரியாக விளக்கிச் சொல்லும் முறை படிக்க அருமையாக உள்ளது (பக். 35-51). பெண், பொன், மண் என்ற மூ ன்று ஆசைகளின் அவலங்களைப் படித்தால் மட்டும் போதுமா? நெஞ்சில் பதிய வைக்க வேண்டாமா? (பக்.66-68). வள்ளலாரின் கவிதைகளின் உட்பொருள் அருமைக்கும், சொல்நயத்திற்கும் முதல்திருமுறையின் இறுதியில் உள்ள இங்கிதமாலை ஒன்று போதும் (பக்.178-241). நான்காம் திருமுறையில், அன்புமாலை என்னும் பகுதியில் உரையாசிரியர் தத்துவங்கள் 36, தாத்துவிகங்கள் 60, ஆகமங்கள் 28 என விளக்குவதால் அவரின் ஆற்றலை நாம் உணர்கிறோம் (பக். 109-111).ஆறாம் திருமுறையில், நினைந்து நினைந்து... என்று தொடங்கும் அருட்பா (பக்.271) நாள்தோறும் படித்தால், மனம் செம்மையாகும் என்று உறுதியாகக் கூறலாம். வள்ளலாரின் சமரச சன்மார்க்கத்திற்கு திருமால் தோத்திரங்கள் (பக்.310-315) எடுத்துக்காட்டாகும். உரையாசிரியர் தக்க இடங்களில் தேவாரம், திருக்குறள் பாக்களைக் கையாள்வதால் அன்னாரின் விரி ந்த ஞானத்தை நாம் துய்க்க முடிகிறது; உரை விளக்கமின்றி ஆங்காங்கே திருவருட்பா பாடல்களைத் தந்துள்ளது நயமாக உள்ளது. நல்ல அச்சும், கட்டுமானமும் நூலிற்கு மேலும் அழகு சேர்க்கின்றன. தமிழுக்குப் பெருமை சேர்க்கும் நூல்; அனைவரும் படித்துப் பயன் பெறலாம். - www.discoverybookpalace.com