பிஸ்கட் நிலாக்கள் – கவிதைத்தொகுப்பு – ஜான் சுந்தர்
மாதக்கணக்கில் பயணம் தொடர்ந்து, கடைசியில் ஒரு பச்சைச்சோலை கண்ணுக்குத் தெரியும். புதைந்திருந்த பூமியின் இரகசியம் வெளிப்பட்டதைப் போல. எல்லா ஜீவராசிகளும் ஒன்றுகூடி, அந்த நீர்ச்சுனையில் தலைதாழ நீர் அருந்தும். நீர்ப்பிம்பத்தில் புலிக்கு அருகில் மான் இருக்கும். உயிர்நீரை சுரக்கிற அவ்விடத்தில் வேட்டை என்பது நிகழாது. எல்லா உயிர்களும் ஒரு சுயவரையரைக்குள் நிற்கும்போது ஒரு வெப்பவெளி தனது மறைநீரை தந்து, அவைகளின் தாகங்களைப் பெற்றுக்கொள்கிறது.
ஏதோவொருவகையில் ஜான்சுந்தர் அண்ணனின் இருப்புருவாக்கும் நிழல்பாதை, நம் எல்லோருக்குமான தாகத்தைப்போக்கும் நீர்ச்சுனைநோக்கி அழைத்துச்செல்லும் என்று நம்புகிறோம். ஜான்சுந்தர் அண்ணனின் சொற்களிலேயே சொன்னால், ‘பூரிக்குள் அடைபட்டிருக்கும் காற்று, தொட்டவுடன் புஸ்சென வெளியேறுவதைப் போல’வே அவருடைய கண்கள் நொடிக்குநொடி குழந்தையாகிக் கொண்டே இருக்கின்றன. குழந்தைகளைப்பற்றி பேசுவதும், குழந்தையாகிப் பேசுவதும் அவருடைய இயல்பாகிவிட்டன.
தொலைத்துவிடாத குழந்தமையின் உயிர்த்தருணங்களைப் பேசுவதாகவே ஜான் சுந்தர் அண்ணனின் கவிதைகள் இருக்கின்றன. மீளமீள அந்த அமுதசுரபியிலிருந்தே அவர் பருக்கை எடுக்கிறார். நகலிசைக்கலைஞனாக தனது வாழ்வைத் துவங்கி, அவ்வளவு மனிதர்களையும் அவ்வளவு குரல்களையும் ஞாபகம் வைத்திருக்கும் அந்த இருதயம் ஒரு அன்புத்தொட்டில் தான்.
‘பிஸ்கட் நிலாக்கள்’ ஜான் சுந்தர் அண்ணின் கவிதைத்தொகுப்பாக, குக்கூ காட்டுப்பள்ளி தன்னறம்-நூல்வெளியின் மூலம் வெளியீடு கொள்கிறது. அவரிடம் இருந்து வருகிற இச்சொற்கள், நம் அறிவில் படிந்துள்ள அழுக்குகளை அகற்றுவதாக இருக்கும். இதுவரை நாம் இறுகப்பிடித்து வைத்திருக்கும் நம் வெற்றறிவுத்தனத்தை அன்பின் நீர்மையால் இக்கவிதைகள் நிரப்பும். கவிதைகளின் உயிர்ப்பை காட்சிகளாக ஆக்கித்தந்திருக்கும் கார்த்திக் பங்காருவின் கருப்பு-வெள்ளை புகைப்படங்கள் கண்விழியை மலரவைக்கிறது.
No product review yet. Be the first to review this product.