கடல்தாண்டி வலியினைச் சுமந்தாலும் வலசைப் பறவைகளின் இறகுகள் கற்றுத்தரும் நம்பிக்கையைப் போலத்தான் கவிஞர் அலறி அவர்களின் இந்தக் கவிதைகள். ஒரு கடல் நாம் பார்க்கும் போதெல்லாம் தனிமையின் ஆழத்தை வருவோர் போவோரிடமெல்லாம் பகிர்ந்துகொண்டு தன் சோகங்களையும் மகிழ்ச்சியையும் அலை என்ற ஒரே மொழியில் நம்மிடம் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்டிருக்கிறீர்களா... ஒரு நிலம் காய்ந்து, வெடித்து, தன்மேல் வளர்ந்த பச்சிளம் செடிகளும், பூச்சிகளுமான தன் சொந்தங்கள் எல்லாம் வாழ வழியின்றிக் கருகிப் போனபோது கொள்ளும் துயரத்தின் வெம்மையை உணர்ந்திருக்கிறீர்களா... ஒரு இனம் தன் கடைசிச் சொட்டு ரத்தத்தையும் அதிகாரத்தின் அகோரப் பசிக்கு ஈந்துவிட்டு மிஞ்சிய உயிர்களையாவது காப்பாற்றி விடமாட்டோமோ என்று ஏங்கிக் கிடப்பதை பார்த்துதான் இருக்கிறோமோ. இப்படியான வலிகளை நிமிடத்திற்கு ஆயிரம் முறை கடந்து வந்திருப்பவைதான் இந்தக் கவிதைகள். இடம்பெயர்தலின் பொருட்டு இழந்த நிம்மதிகளை, உரிமைகளை மீட்டெடுக்க முடியாமல் சொற்களால் கண்ணீர் வடிக்கும் நம்மைப் போன்றவர்களுக்கு எழுத்தும், எழுதுகோலுமே சிறிய ஆசுவாசம். அதிலும் அந்த எழுத்துகள் தூரதேசத்திலிருந்து முகம் அறியாத நம் சொந்தத்தின் விரல்களிருந்து உதிர்ந்தவை என்றால் அதன் வீரியத்தை அளவிட்டு எழுதிவிட முடியாது. அப்படித்தான் இன்று எழுத முடியாத அன்பின் இணைப்பை எழுத நினைக்கிறேன். விடுபட முடியாத உறவின் முன் ஏதிலியாய் கையேந்தி கவிதைகளை வாங்கிச் சுவைக்கிறேன். இந்தச் சுவையும் அன்பும் இன்று வந்ததல்ல என் தமிழ் தோன்றிய அன்று வந்தது. அதை ஒவ்வொரு மிடறாகப் பருக வாய்ப்பளித்த கவிஞர் அலறி அவர்களுக்கு என் நன்றியும், அன்பு வாழ்த்தும் உரித்தாகட்டும். தொடர்வோம் யுகங்கள் கடந்து உய்யும் தமிழாக.
- அம்பிகா குமரன்
வேரல் புக்ஸ்
No product review yet. Be the first to review this product.