கபீர் பாடல்கள் வாய்மொழிப்பாடல்களாகவே பிரபலமடைந்தன. பேச்சு மொழியில் அமைந்த அவரது ஈரடிப் பாடல்களைச் சாதாரண மக்கள் பரவலாக பாடினர். இடைக்காலப் பக்தி இயக்கத்திலிருந்து இன்றைய காலகட்டம் வரை எளிய மக்களின் அன்றாட வாழ்க்கையில் கபீர் நீக்கமர நிறைந்திருக்கிறார். இயற்றி ஐந்நூறு ஆண்டுகள் கழித்தும் இத்தகைய பேரு மிகச் சிலருக்கே வாய்க்கும். சித்தர் பாடல்களில் காணப்படும் விமர்சனம், வரட்டுத்தனமான மரபைப் கேள்விக்குள்ளாக்கும் பாங்கு, பிராமணியத்துக்கு எதிரான போக்கு, எளிய மொழிப் பிரயோகம், எல்லாரும் பாடக்கூடிய சாதாரணத்துவம் போன்ற பண்புகள் கபீரிலும் வீரியத்துடன் அமைந்திருக்கின்றன. அபாரமான படிமங்கள், உவமைகள், பொது புழக்கத்திலிருக்கும் வழக்குகளின் கச்சிதமான பிரயோகம் வாய்பாட்டுத்தன்மைக்குள் அடைபடாத பாடல்கள் என கபீர் எந்த ஒரு மொழியிலும் புதிதாகவும் வீரியத்துடனும் செறிவோடும் வந்து சேர்கிறார்.