எழுத்தாளர், கவிஞர், பாடலாசிரியர் மூத்த பத்திரிகையாளர் என பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட கொ.அன்புகுமார் மயிலாடுதுறை மாவட்டம் முட்டம் என்ற அழகிய கிராமத்தில் பிறந்தவர். கொலம்பஸ்-சசிகலா தம்பதிக்கு மூத்த மகனாகப் பிறந்த இவர், மயிலாடுதுறை மாவட்டம் ஏ.வி.சி. கல்லூரியில் முதுநிலை பட்டம் பெற்றிருக்கிறார். மாணவர் பருவத்தில் தமிழ்நாட்டின் சிறந்த கல்லூரி மாணவர் இதழாக சுஜாதாவின் ‘கற்றதும் பெற்றதும்’ பரிசுபெற்ற ‘இளந்தூது’ என்ற மாணவர் இதழின் ஆசிரியராகவும், ‘நம்ம ஊரு செய்தி’, ‘சிறகுகள்’, ‘யூத் இந்தியா’ போன்ற நாகை மாவட்ட அளவிலான பத்திரிகைகளில் பணியாற்றி, சேட்டிலைட் தொலைக்காட்சிகளான ‘சன் செய்தி’ப் பிரிவில் துணையாசிரியர், ‘ஜீ தமிழ்’ தொலைக்காட்சியின் மூத்த செய்தியாளர், ‘தந்தி டி.வி-’யின் மூத்த நிகழ்ச்சி இயக்குனர், சிறந்த ஆவணப்பட இயக்குனர் என கடந்த 14 ஆண்டுகளாக பல்வேறு வளர்ச்சிப்படிகளை எட்டிப் பிடித்திருக்கிறார். அனைத்திந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கத்தின் மாநில துணைச் செயலாளராகவும், பல சர்வதேச தமிழ் அமைப்புகளிலும் அங்கம் வகித்து வரும் இவர், அரசியலிலும் பொதுவாழ்க்கையிலும் ஈடுபாடு கொண்டவர்.
‘தந்தி டிவி’யில் இவரது ‘நீரும் நிலமும்’ நிகழ்ச்சியின் மூலம் வறட்சியின் பிடியில் சிக்கிக்கிடந்த சுமார் 100-க்கும் அதிகமான கிராமங்களுக்கு தண்ணீர் கிடைக்க வழி செய்திருக்கிறார்.
செந்தமிழ் மாமணி விருது, இலக்கியச் செம்மல் விருது, பல்துறை வித்தகர் விருது, பாரதி யுவகலா விருது, சேவைக்கான அப்துல்கலாம் விருது, சிறந்த மனித நேயர் விருது, சைபா விருது, சோழன் புக் ஆப் ரெக்கார்ட் சேவை செம்மல் விருது, இந்தியன் ஐகான் விருது, தேசிய வங்கியான எச்.டி.எப்.சி வங்கியின் மதிப்புமிக்க ஸ்டார் ஆப் நெய்பர் ஹூட் விருது என ?பல்வேறு விருதுகளை வாங்கிக் குவித்திருக்கிறார். இவரது சேவையைப் பாராட்டி லண்டனில் இருந்து ஸ்டார் ஆப் தி கோவிட் விருது வழங்கப்பட்டது. ‘அன்பு அறக்கட்டளை’ என்ற சேவை அமைப்பு நிறுவி, அதன் மூலம் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு உதவி செய்துவரும் இந்த இளைஞன், இடைவிடாது எழுத்துப் பணி, சேவைப் பணிகளில் தளராமல் நம்பிக்கைக் கொண்டு இயங்கி வருகிறார்.