19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் நகர்ந்த தமிழர் மறுமலர்ச்சியை இருவகை அரசியல் விசைகள் தன் பக்கம் இழுத்துச் சீரழித்துவிட்டன.தமிழர் மறுமலர்ச்சியின் தற்சார்பு முன்னேற்றத்தை - தன்னியக்க முன்னேற்றத்தை வேற்று இனங்களின் விசைகளாக இருந்து இந்திய விடுதலைப் போராட்டமும் - திராவிட இன அரசியலும் பங்கு போட்டு ஈர்த்துக் கொண்டன.
அதேவேளை இந்திய விடுதலை இயக்கமும் திராவிட இன இயக்கமும் இரண்டு வகையான சமூகத் தேவைகளை முன்னிருத்தின.வெள்ளை ஏகாதிபத்திய ஆட்சியை வெளியேற்றி தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியத் துணைக் கண்டம் விடுதலை பெற வேண்டியது முகாமையானது.அது போலவே பார்ப்பன ஆதிக்கம்,பார்ப்பன சமூக ஏகபோகம் ஆகியவற்றிலிருந்து பார்ப்பனரல்லாத மண்ணின் மக்களின் உரிமை மீட்புப் போராட்டமும் மிகவும் தேவையானது.
இந்த இரு இலட்சியங்களையும் இணைத்துத் தமிழ்நாட்டு மறுமலர்ச்சியை முன்நகர்த்தியிருக்க வேண்டும்.அவ்வாறு நடக்கவில்லை.