ஒரு கவிஞனுக்கு ‘பார்வை’ முக்கியம். இயற்கையானவை உள்படத் தன்னைச் சுற்றியுள்ளவற்றை எல்லாம் கவனித்துப் பார்ப்பதற்கான பார்வை முக்கியம். அவை தருகிற சமிக்ஞை முக்கியம். அதை உவமையாகவோ தற்குறிப்பேற்றமாகவோ நாணயத்தின் மறுபக்கத்துடன் சேர்க்கிற நுணுக்கம் முக்கியம். மலர்விழியின் இந்த கவிதைகளை படிக்கையில் ஏற்படும் கவித்துவம் மகிழ்ச்சி. வார்த்தைகளைச் சிக்கனமாக உபயோகிப்பதில் கவிஞருக்கு நல்ல பரிச்சயம் இருப்பது தெரிகிறது. தன்னையே எரித்துக்கொள்ளும் சூரியனை நனைத்து விளையாடும் சிறுமி போன்ற அபூர்வமான பார்வைகள் உள்ளன. ஒருவரை எழுத்தை நோக்கி தூண்டுவது இவர் கண்ணுக்கு மட்டுமே தெரியும் இப்படிப்பட்ட காட்சிகள்தான். தூர் வாரிய வழித்தடத்தில் இவரது கவிதை நதி தங்குதடையின்றிச் செல்லும். தமிழும் அந்த நதியில் விளையாடிக் கொடியில் தலை சீவிக் களிக்கும்.
- கலாப்ரியா
யதேச்சையின் கணத்திற்கும் அற்புதத்தின் விகாசத்திற்கும் இடையே அலைவுற்று வதையுறுதலும், சிறகு ஆர்த்து கிளர்வுற்று, வான் அளத்தலுக்குமான மொழிப் பயணம் மலருடையது. ஆழமான முறிவின் மீது போடப்படும் வெள்ளை மாவுக்கட்டு, அதன்மேல் ஒரு ஸ்மைலியை வரைந்து ‘நலம் மீள்க!’ என்று எழுதுகிற ஸ்னேகத்தின் கையெழுத்து தரும் எளிய பரவசம் இவர் கவிதைகளில் காணக் கிடைக்கிறது. பெரிய பாப்கார்ன் மூட்டை ஒரு தட்டில், மறு தட்டில் உப்பு அதற்கு சம அளவில், ஒரு புஞ்சை நிலத்து அறுவடை ஒரு பக்கம், மறு திசையில் ஆழ்கடலின் உறைதல். கனவுக்கும், வாதைக்குமான தராசு முள், பேனா நுனியாகி வாய்த்திருக்கிறது. இன்னும் வாசனைகளை திரவமாக்கும் சாரமுள்ள வாழ்வு மீதமிருக்கிறது. எழுதுக. வாழ்த்துகள்.
- நேசமித்ரன்
No product review yet. Be the first to review this product.