விலகிச் செல்லும் பருவம்
செந்தில்குமாரின் கதைவெளி நுட்பமானது. வாழ்வின் எல்லா ரகசியங்களையும் தமக்குள் ஒளித்து வைத்துக்கொண்டிருப்பவை அவரது பாத்திரங்கள். அந்த ரகசியங்களை அறிந்துகொள்ளும் வேட்கையே அவரது படைப்புச் செயல். வாழ்வை அதன் கடைசித் துளிவரைப் பருகத் துடிக்கும் தன் பாத்திரங்களை அமைதியாகப் பின்தொடர்ந்து செல்லும் செந்தில்குமார் ஒருபோதும் அவற்றின் சுதந்திரத்தில் குறுக்கிடுவதில்லை. வாழ்வின் சுமை தாளாத தருணங்களில் அவை விடும் பெருமூச்சுகளை, ரகசியமான புணர்ச்சிகளின்போது அவை கசிய விடும் வியர்வைத் துளிகளை, கொடிய வன்முறைகளுக்குள்ளாகிப் பெற்றுள்ள காயங்களிலிருந்து பெருகும் குருதியை, வதைபடும் ஆன்மாவிலிருந்து சொட்டும் கண்ணீர்த்துளிகளைச் சேகரித்துப் பத்திரப்படுத்தி எடுத்து வந்துவிடுகிறார் செந்தில்குமார். தன் அறிதலை மிகத் தணிந்த குரலில் வாசகனிடம் பகிர்ந்துகொள்ளும் முனைப்பே அவரது படைப்புச் செயல்பாடு. எளிய வெதுவெதுப்பான சொற்களால் வாசிப்பனுபவத்தைத் திணறலாக மாற்றும் வித்தை அவருக்குக் கைகூடியிருப்பதன் ரகசியம் இதுவே.