வெங்கட் சாமிநாதன் நவீன தமிழின் மிக முக்கியமான ஆளுமைகளுள் ஒருவர். 1959 களில் "எழுத்து" இதழ் மூலமாக தமிழ் கலை-இலக்கியச் சூழலுக்குள் அடியெடுத்து வைத்த வெ.சா. அவர்களின் அரை நூற்றாண்டு கால எழுத்துக்களை இன்று திரும்பிப் பார்க்கும்போது, தமிழ் கலை இலக்கியப் பண்பாட்டுச் சூழல் மீதான அவரது செயற்பாட்டுக் களம் மிக பரந்து பட்டது என்பதை நாம் உணர முடியும். கலை இலக்கியம் தொடர்பான பொழுதுபோக்குகளுக்கு நடுவில் அவரது குரல் தனிக்குரலாகவும் எதிர்க்குரலாகவும் ஒலிப்பதை இப்போதும் கேட்கலாம். தமிழ் கலை இலக்கியச் சூழலின் அடிப்படைகளை கேள்விக்குள்ளாக்கி ஆழமான விவாதங்களை நோக்கி நம்மை அழைத்துச் சென்றவை வெ.சா.வின் எழுத்துக்கள். இலக்கியம், சங்கீதம், நாடகம், சினிமா, காண்பியக் கலைகள், நாட்டார் கலைகள் குறித்த அவரது பார்வைகள் தமிழ் விமர்சன எழுத்தின் எல்லைகளை விரிவுபடுத்தியவை. நீடித்த முக்கியத்துவம் வாய்ந்தவை.