பேரமைதியின் பிறப்பிடமாக இருந்திருக்க வேண்டிய புத்தனின் தேசம், யுத்த வெறி பிடித்த எத்தனின் தேசமாக வெறிபிடித்துக் கிடக்கிறது. அப்பட்டமான இனப்படுகொலையை உலகமே வேடிக்கைப் பார்க்க நிகழ்த்திக் காட்டிய கொடூர தேசம் இன்றைக்கும் வதைகளின் கூடாரமாக தமிழ்ப் பரப்புகளை மாற்றி வைத்திருக்கிறது. பச்சிளம் குழந்தையின் எச்சில் நினைவுகளுடன் தாய்மார்கள், அன்போடு அரவணைப்பைத் தேடி அல்லல்படும் அறியா குழந்தைகள், ‘மாளத் தயார்; மானத்தை இழக்கமாட்டோம்!’ என்று கற்பைக் காக்கப் போராடும் பெண்கள், ஓடிய களைப்புத் தீர அமைதியை நாடும் நாடி தளர்ந்தோர் என, தமிழீழ மண்ணில் பிறந்த எந்த உயிருக்கும் வாழும் உரிமை இல்லாத ஓர் இடமாக மாறிவிட்டது இலங்கை. உயிருக்குப் பயந்தும், உடமைகள் அற்றுப்போயும் நிற்கதியாய் தவிக்கும் வன்னிப் பகுதி மக்களின் அவலம், வரலாற்றுத் துயரம். அவர்களின் அன்றாட வாழ்க்கையில் நடந்த நெஞ்சுருக வைக்கும் நிகழ்வுகளின் பதிவுகளே இந்த நூல். தமிழ்த் தேசத்து மக்களுக்கும் இலங்கை ராணுவத்துக்கும் உள்ள கிளர்ச்சிகளின் பின்னணி என்ன?, இலங்கைத் தமிழ் மண்ணில் நடந்த கொடுமைகளுக்கு ஆணிவேராக இருந்த காரணி எது?, அங்கு உள்ள தமிழ் மக்களின் இன்றைய நிலை, தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் நோக்கம், இதில் தமிழீழ உணர்வுகொண்ட போராளிகளின் பங்கு என, தான் கண்ட காட்சிகளையும், தான் அனுபவித்த கொடுமைகளையும், கதறல் சாட்சியாக இந்த நூலில் இறக்கி வைத்திருக்கிறார் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ள விரும்பாத ஆதங்கக்காரர் ஒருவர். நெஞ்சை நொறுக்கும் நிஜங்களையும் - உலகத்தையே உறையவைக்கும் கொடூரங்களையும் படித்து உங்கள் கண்களில் கசியும் நீரே, நிகழ்ந்த படுகொலைகளைத் தட்டிக் கேட்பதற்கான முதல் நெருப்பு!