“இது புனைவெழுத்தல்ல.ஆயினும் புனைவே இல்லாத எழுத்தும் அல்ல.
வைகை நதிக்கரையின் இருமருங்கிலும் தொல்லியல் துறையினர் தோண்டத் தோண்ட வெளிப்பட்டு எழுந்து நின்ற குத்துக்கற்கள்,பானை ஓடுகள்,தந்தத்தாலான தாயக்கட்டைகள்,எழுத்துகள் பொறித்த எண்ணற்ற தொல் புனைவென்னும் வண்ணம் குழைத்து நமக்குத் தீட்டித் தந்திருக்கும் வரலாற்றுக் கோலங்கள் இவை.இதை வரலாற்று ஆவணமென்பதா?அறிவியல் புனைவென்பதா?ஆகச்சிறந்த வாழ்க்கைச் சித்திரம் என்பதா?
வைகைக் கரையின் வடகரையில் தமிழ் பிராமி எழுத்தில் தன் பெயர் பொறிக்கப்பட்ட பொற்கட்டியுடன் கோதை நிற்கிறாள்.தென்கரையின் நடுகல்லில் மாடுகளென்னும் செல்வம் காக்க உயிர் தந்த அந்துவன் நிற்கிறான்.கோதைக்கும் அந்துவனுக்கும் இடையில் சுழித்து ஓடுவது வைகை என்னும் நதிமட்டுமல்ல.நம் பண்டைத்தமிழரின் வரலாற்று நதி என நிறுவுகிறது இந்நூல்.வரலாற்றுக்கு ஒரு படைப்பாளி அளிக்கும் பங்களிப்பு இது.
வாசிக்க வாசிக்க கோதை மட்டுமல்ல,கனவு கண்ட வாழ்வு சிதைந்த ஆவேசத்துடன் கையில் ஒற்றைச் சிலம்புடன் கண்ணகியும் நம்மை நோக்கி நீதி கேட்டு வருகிறாள்.கீழடியைத் தோண்ட மறுத்து மண்மூடிச் சென்றுவிட்ட நடுவண் அரசின் வாசற்கதவுகளில் மாணிக்கப்பரல்கள் சிதறத் தன் சிலம்பை வீசுகிறாள்.தேறா மன்னா என்று அவள் கதறும் கதறல் ஆவண ஆட்சியாளர்களின் செவிகளில் விழாமல் போகலாம்.ஆனால்,கண்ணகியின் புதல்வர்களும் புதல்விகளுமான-நமக்குக் கேட்க வேண்டாமா என்கிற கேள்விகளுடன் நம் உள்ளங்களை ஊடறுக்கும் நூல் இது.
ஆவேசத்துடன் நம்மை செயலுக்கு அழைக்கின்ற அறைகூவல் இது”.