தாமரைக் குளம் முதல் தலைநகரம் வரை... :
1959 – ம் ஆண்டு, அதாவது இன்றையிலிருந்து சரியாக 54 ஆண்டுகளுக்கு முன் நான் “ தாமரைக்குளம் “ என்கிற படத்தை இயக்கிக் கொண்டு இருந்த்தேன். ஒரு நாள் ஒரு இளைஞர் என்னை என் அலுவலகத்தில் வந்து சந்தித்தார். தன் பெயர் ரத்தினம் என்றும் தன் சொந்த ஊர் குடியாத்தம் என்றும் அறிமுகப்படுத்திக் கொண்டார்.
”என்ன விஷயமாக என்னை சந்திக்கிறீர்கள்?” என்று வினவினேன்.
” நான் சிறுவயது முதல் ஸ்டண்ட் கலையில் ஆர்வமுள்ளவனாக இருந்து வருகிறேன். பலவிதமான சண்டைப் பயிற்சிகளும் முறையாக கற்றுள்ளேன். தங்கள் படத்தில் வரும் சண்டைக் காட்சிகளை நான் அமைத்துத் தருகிறேன் எனக்கு அந்த வாய்ப்பைக் கொடுங்கள் “ என்று கேட்டார்.
”பார்ப்பதற்கு துடிப்பாகவும், மிகவும் தன் நம்பிக்கையுடனும், பேசும் அந்த இளைஞர் ரத்தினத்திற்கு ஒரு வாய்ப்பு அளித்து பார்ப்போம்’ என்று எனக்குத் தோன்றியது.
“தாமரைக்குளம்” பட்த்தில் முதன் முதலாக திரு.ரத்தினம் என்கிற ஜூடோ ரத்தினம் அவர்கள் சண்டைக் காட்சிகளை எடுக்கும் பணியை மேற்கொண்டார்.
சரியாக வரும் வரை ஒத்திகைகளை சளைக்காமல் பார்வையிடுவது, தப்பித் தவறிகூட யாருக்கும் எந்த நிலையிலும் ஒரு சிறு அடியோ காய்மோ வராமல் பார்த்துக் கொள்வது.
அதே சமயம் சண்டைக் காட்சிகளை எடுப்பதோடு மட்டுமில்லாமல், அந்தக் காட்சிகளை எடிட்டிங் ரூமில் உட்கார்ந்து விறுவிறுப்பாக இருக்கும் வகையில் நன்றாக எடிட்டிங் செய்வது.
இப்படி பல பரிணாமங்களில் தன் திறமையைக் காட்டினார். திரு.ஜூடோ ரத்தினம். ‘ தாமரைக் குளத்தில் அவரது பணியைப் பார்த்து பலரும் வியந்தார்கள். தமிழ் திரைப்பட உலகமே இப்படி ஒரு திறமையான இளைஞர் வன்கலை ஞானம் கொண்டு வளர்ந்துள்ளாரே என்று அதிசயப்பட்டது.