மஞ்சுளவின் கவிதைகள் நுட்பமானவை. சிங்கள சமூகத்தின் இயலாமையையும் மௌனத்தையும் நோக்கிச் சொல்லடிகளை வீசுபவை. சிறகுகள் வெட்டப்பட்ட பறவைகளைப் பாடுபவை. உடையாத கனவுகளின் கண்ணாடிகளைத் தேடுபவை. கரைந்து போகும் புன்னகைகளைத் துயருடன் பாடுபவை. தமிழ்த் தோழர்களுடனான நெருக்கத்தை இரங்கலுடனும் அளப்பரிய துயரத்துடனும் வடிப்பவை. சுற்றிவர அடைக்கப்பட்ட கொடுமை சூழ்ந்த தடுப்பு முகாம்களின் முட்கம்பிகளைச் சுட்டெரிப்பவை. உணர்வுத் தோழமையின் கவிதா வெளிப்பாட்டிற்கு மஞ்சுளவின் கவிதைகளை மீறி எவருக்காவது வண்ணம் தீட்ட முடியுமா என்னும் மொத்தக் கேள்வி என் மனதில் எழுகிறது. வாழ்க்கைக்கும் போராட்டத்துக்கும் நம்பிக்கை தர வேறெதுவும் இல்லையெனினும் நம்மிடையே இருக்கிறது: கவிதை.- சேரன்