குழந்தை வளர்ப்பு மிகப்பெரிய கலை. குழந்தை பிறந்து, பள்ளி செல்லும் வரையிலான காலக்கட்டம் மிகவும் சிக்கலானது. திடீர் திடீரென்று குழந்தைக்கு உடல் நலக் குறைபாடு ஏற்படுவதற்கு நோய் எதிர்ப்பு சக்தி இல்லாததுதான் காரணம். குழந்தை பிறந்ததும் நோய் எதிர்ப்பு சக்தி இருக்காது. தாய்ப் பாலில் இருந்துதான் குழந்தைக்கான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தி மண்டலம் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் மேம்படும். இந்தக் காலக்கட்டத்தில் குழந்தைகளுக்கு எளிதில் நோய்த்தொற்று ஏற்படலாம். இதைத் தவிர்க்கத்தான் குழந்தைகளுக்குத் தடுப்பூசி அல்லது தடுப்பு சொட்டு மருந்து அளிக்கப்படுகிறது. தடுப்பூசியானது குழந்தைக்கு, குறிப்பிட்ட நோய்க்கு எதிராக செயல்படும் ஆற்றலைத் தருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்புவரை இந்தியாவில் ஏராளமான குழந்தைகள் போலியோ நோயால் பாதிக்கப்பட்டனர். இந்திய அரசு எடுத்த தொடர் முயற்சி காரணமாக தற்போது, போலியோ இல்லாத நாடாக இந்தியா மாறிவிட்டது. இதுபோன்று ஏராளமான தொற்று நோய்கள் ஒழிக்கப்பட்டு வருகின்றன. இதற்கு தடுப்பூசி அல்லது தடுப்பு மருந்துகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தடுப்பூசி ஏன் போடப்படுகிறது? எப்போது போடவேண்டும்? குறிப்பிட்ட நாளில் தடுப்பூசி போடவில்லை என்றால், மீண்டும் எப்போது போடுவது? காய்ச்சல், சளி இருந்தால் தடுப்பூசி போடலாமா? போன்ற ஏராளமான சந்தேகங்கள் தாய்மார்களுக்கு இருந்துகொண்டே இருக்கிறது. அந்த சந்தேகங்களுக்கு எல்லாம் தீர்வு அளிக்கிறது இந்த நூல். டாக்டர் விகடனில் தொடராக வெளிவந்து பலரின் பாராட்டைப் பெற்று, தற்போது நூலாக வெளிவந்துள்ளது. குழந்தை பிறந்தது முதல் அளிக்க வேண்டிய தடுப்பூசிகள் என்று இந்திய குழந்தைகள் நல மருத்துவர்கள் கூட்டமைப்பு பரிந்துரைத்த அனைத்து தடுப்பூசிகள் பற்றி விரிவாகக் குறிப்பிட்டுள்ளார் நூலாசிரியர். கர்ப்பிணிகளுக்கும், குழந்தை பெற்ற பெண்களுக்கும்... நோயில்லா, ஆற்றல்மிக்க குழந்தைகளை வளர்த்தெடுக்க சிறந்த வழிகாட்டியாக இந்த நூல் திகழும்.