தமிழ் நாட்டுப்புறவியல்
பெண்கள், கலைஞர்கள் & தெய்வங்கள்
தமிழத்து நாட்டுப்புறவியல் தமிழ்ச் சமூகத்திற்குச் சொல்ல விரும்புவது என்ன? தமிழ்ப் பண்பாட்டை அது எவ்வாறு அணுகுகிறது? அதன் சிக்கல்கள் என்று எவற்றையெல்லாம் அடையாளப்படுத்துகிறது? அச்சிக்கல்களை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டுமென்று அறிவுறுத்துகிறது? என்றெல்லாம் தொடர்ச்சியாகக் கேட்கப்படும் கேள்விகள். நாட்டுப்புறவியலின் இருப்பை முன்வைத்துக் கேட்கப்படுபவையாகவே அமைந்துள்ளன. இதனாலேயே, நாட்டுப்புறவியலின் அரசியல் என்ன என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது.
யாருடைய சார்பாக அல்லது குரலாக் நாட்டுப்புறவியல் பேச விரும்புகிறது? கலைஞர்களின் குரலாகவா? வணிகர்களின் குரலாகவா? அதிகார பீடங்களுக்குச் சாதமான நிலைப்பாட்டைத் தக்கவைக்கப் போகிறதா? அல்லது எதிர்க்குரல்கள் ஒலிக்கும் தளமாக விரியப்போகிறதா?
தமிழ் நாட்டுப்புறவியல் என்ற இந்த நூல் எழுப்பும் கேள்விகளூம் விவாதங்களும் தமிழுக்குப் புதியவை. ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலைப் பண்பாட்டுத் தளத்தில் முன்னகர்த்திச் செல்லக்கூடியவை. பண்பாட்டு ஆய்வுகளின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கான அடித்தளங்கள். தமிழில் புழங்கி வரும் கரடுமுரடான ஆய்வுமொழிக்கு மாற்றாக புனைவு தழுவிய புதுமொழியொன்றையும் இந்நூல் அறிமுகம் செய்கிறது.