ஒவ்வொரு பத்திரிகையாளரும், குறிப்பாக Investigative Journalism துறையில் ஆர்வமுள்ள அனைவரும் படிக்க வேண்டிய நூல் இது.
‘தராசு’ வார இதழில் தென்மாவட்ட செய்தியாளராகத் (மது மலரன்பன்) தன் வாழ்க்கையைத் தொடங்கிய அர்ஷியா, மெல்லமெல்ல உயர்ந்து, தனியாகப் பத்திரிகை நடத்தும் அளவுக்கு வளர்ந்தவர். இன்று நாவலாசிரியராக, மொழிப்பெயர்ப்பாளராக அறியப்படும் அவரது இந்தப் பத்திரிகை முகம் பலரும் அறியாதது. தன் பத்திரிகையுலக அனுபவங்களை முகநூலில் ‘அசை’ போட்ட நண்பர் எஸ்.அர்ஷியாவின் கதைகள் ‘ஸ்டோரீஸ்’ என்ற தலைப்பில் நூலாக வெளிவருகிறது.
1987-96களில் சமூகப் பொறுப்புள்ள ஒரு பத்திரிகையாளர் எப்படி அலைந்து திரிந்து செய்திகளைச் சேகரித்தார்... அவற்றில் எதை முதன்மைப்படுத்தினார்? எவற்றை, ஏன் நீக்கினார்... என்ற பயணத்தை இந்நூலில் ரத்தமும் சதையுமாக உலவவிட்டிருக்கிறார். அன்றைய காலகட்டத்தில் தமிழகத்தின் தென்பகுதி சமூக, பொருளாதார வாழ்வு எப்படி இருந்தது? அதன் வளர்ச்சி மாற்றங்கள் குறித்துக் காட்சிகளாக விவரிக்கிறார். இதன்கூடவே இன்னொரு வளர்ச்சியும், அதுசார்ந்த சோகங்களும் மவுனமாக ‘அசை’போடப்பட்டிருக்கிறது. அதுதான் பத்திரிகையுலக வரலாறு!
இன்றைய ‘டேபிள் ஜர்னலிச, தொலைப்பேசி-வாட்ஸ் அப்’ செய்தி சேகரிப்பில் புழங்கும் பத்திரிகையாளர்களும், அவற்றையே ‘நியூஸ் வேல்யூ’வாகக் கருதும் வாசகர்களும் இதிலிருந்து பாடம் கற்கலாம். கற்க வேண்டும் என்பதுதான் அர்ஷியாவின் விருப்பமும். ஏனெனில், பல ஆண்டுக்காலச் சமூக நீதிப் போராட்டங்களின் விளைவாகக் கிடைத்திருக்கும் சுதந்திரத்தின் தோளில், இப்போது நாம் அமர்ந்திருக்கிறோம். அதை இந்த ‘அசை’ உரக்கச் சொல்கிறது.
‘ஸ்டோரீஸ் (அசை)’ ஒரு பத்திரிகையாளரின்/வாரப் பத்திரிகை இணையாசிரியரின்/ வார இதழ் வெளியீட்டாளரின் அனுபவம் மட்டுமல்ல...
1980 முதல் 1996 வரையிலான தமிழ் சமூகத்தின் தெறிப்புகளும் கூட.
No product review yet. Be the first to review this product.