குளிரூட்டப்பட்ட தனி அறை. சுழல் நாற்காலி. அதிகாரம். அதிக வருமானம். இதுதானா? இவ்வளவுதானா? இல்லை. அலுவலகத்தில் தொடங்கி அலுவலகத்தோடு முடிந்துவிடும் சமாசாரம் அல்ல இது. மேனேஜர் என்பது ஒரு பதவி மாத்திரமல்ல. அது ஒரு குறியீடு. ஒரு மேனேஜரின் பண்புகளை சுருக்கமாக இப்படி வரையறுக்கலாம். தொலைநோக்குடன் சிந்திப்பது. தெளிவான இலக்குகளை அமைத்துக்கொள்வது. சரியான வேலையை, சரியான நபர்களுக்குப் பகிர்ந்தளிப்பது. தன்னுடைய டீமின் செயல்திறனை அதிகரிப்பது. பணியாளர்களையும் வளர்த்து, நிறுவனத்தையும் வளர்த்து அதன் மூலம் தானும் வளர்ச்சிபெறுவது.
இதற்கிடையில், நிமிடத்துக்கு நிமிடம் முளைக்கும் புதிய பிரச்னைகளுக்கு உடனடித் தீர்வு கண்டுபிடித்தாகவேண்டும். மாறிவரும் சூழலைக் கணக்கில் கொண்டு, லாபத்தை நோக்கி நிர்வாகத்தைத் தொடர்ந்து நடத்திச்சென்றாக வேண்டும். மேலாளர் ஆவதற்கான வாய்ப்பு அனைவருக்கும் உண்டு என்றாலும் அதற்கான தகுதியை வெகு சிலரே கவனமாக வளர்த்துக்கொள்கிறார்கள். அந்த வகையில், உங்களுக்கு இது ஒரு பிரத்தியேக வாய்ப்பு. நிர்வாகவியல் துறையில் ஆழ்ந்த அனுபவம் கொண்ட சோம. வள்ளியப்பன் தான் நேரடியாகக் கண்டறிந்த சில நுணுக்கமான உத்திகளை இந்தப் புத்தகத்தில் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறார். மிகச் சிறந்த ஒரு நிர்வாகியாக உங்களை நீங்கள் வளர்த்தெடுத்துக்கொள்ள இந்தப் புத்தகம் உதவும்.