இருபெரும் இதிகாசங்களாகிய இராமாயணமும் மகாபாரதமும் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காதவை. பிரமிப்பைத் தருகின்றவை. எண்ணற்ற கதை மாந்தர்களைக் கொண்டிருந்தாலும் ஒவ்வொரு பாத்திரப் படைப்புக்கும் முக்கியத்துவம் தரப்பட்ட இவற்றைக் கட்டுரைகளாகச் சொல்லிச் செல்வது ஒருவகை உத்தி. கதையாகச் சொல்லிச் செல்வது இன்னொரு வகை. பலமான பின்புலத்தின் இழையிலிருந்து விலகாதிருக்க வேண்டிய நிர்ப்பந்தம். சுவை குன்றாமல் சொல்ல வேண்டிய அவசியம். சறுக்கி விடாமல் கத்தி மேல் நடப்பது போன்றதான இந்தச் சவாலை எந்த சாமர்த்தியங்களும் தேவைப்படாமல் மிக இயல்பாகத் தன் நேர்மையான எழுத்தினால் கடந்திருக்கிறார் ஐயப்பன் கிருஷ்ணன்.