பின்நவீனநிலை
இலக்கியம் அரசியல் தேசியம்
அ. மார்க்ஸ்
---
பின்நவீனத்துவம் என்பது இன்னொரு எழுத்துமுறை அல்லது கலை வெளிப்பாட்டுமுறை என்று மட்டுமே முன்வைக்கப்பட்டும் புரிந்துகொண்டும் இருந்த ஒரு சூழலில், தத்துவ வரலாற்றின் ஊடாக அதன் இடத்தைச் சுட்டிக் காட்டும் எழுத்துகளின் தொகுப்பு இது. இதுகாறுமான எல்லாத் தத்துவச் செயல்பாடுகளையும் விமர்சிக்க வந்த ஒரு அரசியல் செயல்பாடாக அது இங்கு அடையாளம் காட்டப்படுகிறது. ‘உன்னையே நீ அறிந்துகொள்’ என்கிற தத்துவ முழக்கத்தைக் கவிழ்த்த அது, ‘மற்றவர்களை அறிந்துகொள்’ எனக் கூவியது. இதனூடாக ‘மற்றமையை அறிந்துகொள்ள இயலாமையை’ இந்நூல் சுட்டிக்காட்டியதுதான் எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
முதலாளிய ஜனநாயகம், தேசிய விடுதலை, பாட்டாளிவர்க்கச் சர்வாதிகாரம் என எல்லா முயற்சிகளுமே கொடூரமான, அதிகார வெளிப்பாடுகளாக மாறிப்போனதைக் கண்முன் பார்த்த பின்னும், இந்த நோக்கில் எழுப்பப்படும் கேள்விகளை எப்படிப் புறந்தள்ள முடியும். இதன் பொருள் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொல்லக்கூடிய இன்னொரு பெருங்கதையாடலாக பின்நவீனத்துவம் உள்ளிட்ட ஏதொன்றையும் முன்வைப்பதல்ல. மாறாக எல்லாவிதமான பெருங்கதையாடல்களுக்கும் இனி காலமில்லை எனச் சுட்டிக்காட்டுவதுதான் என்கின்றன இந்நூலில் உள்ள கட்டுரைகள். பன்மைத்தன்மை, ஒற்றைக் கருத்தியலின் சாத்தியமின்மை, கருத்து மாறுபடும் சுதந்திரம் ஆகியவை இந்த எழுத்துக்களின் ஊடாகத் திரும்பத் திரும்ப வற்புறுத்தப்படுகின்றன.
சென்ற நூற்றாண்டின் முக்கிய இயற்பியல் கண்டுபிடிப்புகளான ஈன்ஸ்டினின் சார்பியல் தத்துவம், ஹெய்சன்பர்கின் உறுதியின்மைக் கொள்கை, நீட்ஷேயின் அதிரடிச் சிந்தனைகள், பிக்காசோவின் ஓவியங்கள், பெரியாரியம், பெண்ணியம், மாற்றுப் பால்நிலைகள், மாற்றுக்கல்வி, மாற்று மருத்துவம், ஒழுங்கவிழ்ப்பின் தேவை, சிறுபான்மைகளின் உரிமைகள் என இந்நூல் ஒரு புதிய சிந்தனைக் கிளர்ச்சியை வாசிப்பவர்களிடத்தில் உருவாக்கும் என்பதில் ஐயமில்லை.
No product review yet. Be the first to review this product.