பயணம்:
சராசரி குடும்ப வாழ்வை வாழ விரும்பாமல் வீட்டைவிட்டு ஓடிப் போகும் இளைஞன் ஒருவன் முழுமையான மனிதத்தை நோக்கி வீடு திரும்பும் கதை இது. இந்து மத ஆசிரமம் ஒன்றைக் கதைக்களமாகக் கொண்டிருக்கும் இந்நாவல், அதன் மேன்மைகளையும் கீழ்மைகளையும் பாகுபாடற்று விவரிக்கிறது.
மானுடனின் மறைமுகமான மாபெரும் போராட்டம் வாழ்க்கையின் விதிகளில் இருந்து தப்பிப்பதுதான். இந்நாவலின் கதை நாயகனும் அவ்வாறே தப்பிக்க முயற்சிக்கிறான். தனது பலவீனங்களில் பலியாகும் ஒவ்வொரு சமயத்திலும் கனவுகளற்ற சோம்பேறிகளால் அவன் சிறகுகள் ஒட்ட வெட்டப்படுகின்றன. ஆனால் அவனது கனவு அவனை ஒரு மீட்பரைப்போல மீட்டெடுத்துக்கொண்டே இருக்கிறது.
உலகம் சுற்றித் தேடி அலைந்த பிறகே தன் கால்களின் கீழே பொக்கிஷம் இருப்பதைக் கண்டடையும் ‘ரசவாதி’ நாவலின் சிறுவன் சந்தியாகுவைப் போல இவனும் ஊர் சுற்றலுக்குப் பிறகே தனது ’பொக்கிஷ’த்தைக் கண்டடைகிறான்.
தமிழில் இத்தளத்தில் விரிவாக எழுதப்பட்டிருக்கும் முதல் நாவல். ஆரோக்கியமான பார்வையை முன்வைப்பதனூடாக இவ்வரவு தனது முக்கியத்துவத்தைப் பெறுகிறது. புனிதத்தின் பெயராலும் வரலாற்றின் ஞாபகங்களுக்குப் பதிலுரைக்கும் விதமாகவும் எழுப்பப்படும் வன்முறைகளையும் கேள்விக்குட்படுத்துகிறது அரவிந்தனின் ஆழமான பார்வை.