பாட்டியின் குரல்வளையைக் காப்பாற்றி வைத்திருக்கிறேன்
வேடபட்டிபாட்டி மாரியம்மாள் காடு கழனி எல்லாம் கிழங்குபயறு விற்றுத் திரிந்தவள். காடுகாடாய்த் திரிந்த கதைசொல்லி அவள், வீரலட்சுமிப் பூட்டிக்கு நாகலாபுரத்தில் ஆதக்காள், வேடபட்டிப்பாட்டி, பம்பை இந்த மூன்று அதிசய மனுசிகளும் பிறந்தார்கள்.இவர்களுக்குள் ஊடாடிக் கொண்டே வளர்ந்தேன். மூவரும் எல்லா ஓடைகளிலும் இன்னும் அலைந்து கொண்டிருக்கிறார்கள். வேடபட்டி தேவதேவனின் தாயாரின் சொந்த ஊர், காட்டுப்பருத்திக்கும் கம்மம்புல்லுக்கும் தட்டாநெத்துக்கும் மணிச்சோளத்துக்கும் சொங்குச் சோளத்துக்கும் கதைசொல்லி அவள் சோளப்பெண்ணாகவே காடுகாடாய் ஆடி அசைந்து திரிந்தாள். அவள் கொடுத்த பணியாரத்தில் கிழங்கு பயறில் எல்லா விவசாய மக்களும் கீகாட்டில் வாழ்ந்தார்கள். அவள் ஆவிதான் என் கதை சொல்லியான சுப்புத்தாயைப் பிடித்து என்னையும் தாவிப் பிடித்துக்கொண்டது.