அறிவு துலங்கிய பருவத்தில் மணியம்மா ஒரு பிரமாண விதவை. ஆரம்பத்தில் தேச விடுதலைப் போராரட்டத்தின்பால் ஈர்க்கப்பட்டார்.அந்த
இயக்கம் சார்ந்தவர்களால் விவசாயக் கூலிகள் சுரண்டப்படுவதைக் கண்டு அறச்சீற்றம் கொண்டார். சனாதன மரபை உடைத்தெறிந்துவிட்டு
பொதுவாழ்வில் ஈடுபட்டார். மொட்டையிடுவதைத் தவிர்த்து முடிவளர்த்து கிராப் வைத்துக் கொண்டார். வேட்டியும் ஜிப்பாவும் மேல்துண்டும்
அணிந்து தனக்கொரு தனி அடையாளத்தை நிறுவிக் கொண்டார். சைக்கிளில் பயணித்தார். எதிரிகளைச் சமாளிக்க தற்காப்புக் கலைகளைக்
கற்றார். இடதுசாரி இயக்கத்தில் விவசாயக் கூலித் தொழிலாளர்களை ஒருங்கிணைத்துப் போராட்டம் நடத்தினார். 1953 ஆம் ஆண்டு எதிரிகளின்
சூழ்ச்சிக்குப் பலியாகி இறந்துபோன அவர் வரலாற்று நாயகியானார்.
மணலூர் மணியம்மாவைப் பற்றிக் கள ஆய்வு செய்து இந்த வாழ்க்கை வரலாற்று நாவலை எழுதியிருக்கிறார் ராஜம் கிருஷ்ணன். இடதுசாரி இயக்க
வரலாற்றில் கவனம் பெறாமல்போன அந்த வீரப் பெண்மணியைப் பற்றிய ஒரே பதிவு என்ற வகையில் இந்தப் படைப்பு முக்கியமானது.