தமிழ்த் திரையிசை உள்ளிட்ட மிக முக்கியமான கட்டுரைகள் அடங்கிய இந்நூல், யுகபாரதியின் ஒன்பதாவது கட்டுரைத் தொகுப்பு, இந்நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் காலகதியில் ஐந்தாண்டுகளில் அவ்வப்போது எழுதப்பட்டவை. எனினும், இக்கட்டுரைகள் வெளிவந்த சமயத்தில் விரிந்த தளத்திலான விவாதங்களை எழுப்பின. தன்னை எப்போதுமே படைப்புக்கு அப்பால் முன்நிறுத்த முனையாத யுகபாரதி, காற்றின் திசையில் வாசனை பரவுவதுபோல காலம் செல்லும் திசைநோக்கியே சென்றுகொண்டிருப்பவர். கொள்கை, கோட்பாடு, சார்பு, நடுநிலை இவற்றைக் கடந்தும் எழுத்திலுள்ள சுவாரஸ்யங்களை நுகரக்கூடியவராக தன்னை வெளிப்படுத்துபவர். தமிழில் எழுதிவரும் அத்தனைப் படைப்பாளிகளையும் சிற்றிதழ்களையும் ஆர்வத்தோடு வாசிக்கக்கூடியவர். பக்கத்து மேசையில் பரிமாறப்படுபவற்றை அறிந்துகொள்ள அலையும் நம்முடைய கண்களின் குவிமையம், அரசியலாகவும் இலக்கியமாகவும் சினிமாவாகவும் இருப்பதை குற்றமாகக் கொள்வதற்கில்லை. ஏனெனில், இன்றைய நாளின் இறுதியிலேனும் பக்கத்து மேசையில் பரிமாறப்பட்டவை நம்முடைய மேசைக்கும் வரும் வாய்ப்பிருக்கிறது என்பதை இந்நூலில் சொல்லிச் செல்கிறார்.