பைத்தியக்காரனின் சொற்கள்
எனதுபாடல் ஒருபோதும் முடியாதது கேட்பதற்கென ஒருவருமில்லை என்றாலும் பாடிக்கொண்டே இருப்பேன் நான் நூலிழைகளின் பின்னலைப்போன்ற என் பாடலின் நீள் இழைகளால் காற்றை நெய்துகொண்டிருக்கிறேன் பாடலாலான காற்றாடையை புறக்கணிக்கப்பட்ட ஆன்மாவின் தோள்களில் போத்துகிறேன் நான் முழுவதுமாக இற்றுப்போய் மணற்துகள்களாய் உதிர்ந்தாலும் என்பாடல் நிற்கப் போவதில்லை இம்மண்ணில் உங்களின் பாதங்களில் மிதிபடும் சருகுகள் என் பாடலை முணுமுணுக்கும் உங்களின் துயரத்திலிருந்து கிளம்பும் கண்ணீர்த் துளிகளின் கோடுகளில் என் பாடல் வரிகளின் தடங்கள் இருக்கும் எல்லோரும் உறங்கிவிட்ட தாமத இரவில் தெருவோரம் எரிந்துகொண்டிருக்கும் அடுப்பில் கொதிக்கிற உலைநீரின் கொதிப்பொலியில் என்பாடலின் பசி பருக்கைகளாய் வெந்துகொண்டிருக்கும் அப்போதே பிறந்த குழந்தையின் மூடிய விரல்களை திறக்கும்போழ்தில் எழுகிற மணம் என் பாடலுடையதே இன்னும் அனைவரும் திரும்பிவிட்ட தனிமையில் எரிந்துகொண்டிருக்கும் பிணத்திலிருந்து கசிந்து கொண்டிருக்கும் மௌனமும்தான் என் பாடலின் ஆதாரம் நான் ஒருபோதும் எனது பாடலை நிறுத்தப்போவதில்லை நீங்கள் எல்லோருமே புறப்பட்டுவிட்டாலும்கூட என்னைப் போலவே ஒரு பைத்தியமாய் என் பாடலும் அலைந்துகொண்டிருக்கட்டும் ஆம் என் பாடல் ஒருபோதும் முடியாது.