லா.ச.ராவை வாசிப்பது என்பதே ஒரு அனுபவம்.எழுத்து,வார்த்தை என்ற எல்லையைக் கடந்தது அந்த அனுபவம்!அந்த அனுபவம் தரும் இன்பம் என்பது அலாதியானது.அடர்த்தியும் இறுக்கமும் கொண்ட அவருடைய மொழியில் ததும்பும் கனிவும் ஈரமும் நம்மை வேறு ஒரு மனோநிலைக்குக் கொண்டு சென்றுவிடுகிறது.
லா.ச.ராவை ஒருபோதும் அறிவினால் தொடமுடியாது.ஆனால்,உணர்வினால் எளிதில் அடைந்துவிட முடியும்.ஏனென்றால்,லா.ச.ராவின் கதைகளில் உண்மை ததும்புகிறது.உண்மையின் தீவிரம் விளங்காமலே அழகும் மெருகும் சேர்ந்த படைப்பாக நம் மனதில் அது ததும்புகிறது.