கள விளம்பரத்துறை அதிகாரி என்ற முறையில்,நண்பர் சமுத்திரம்,எய்ட்ஸ் பற்றிய பல விழிப்புணர்வு கூட்டங்களை,முகாம்களை,பட்டறைகளை நடத்தும் பொறுப்பில் ஈடுபட வேண்டியிருந்தது.தனியாரும் அரசும் கூட்டாக செய்து வரும் விளம்பரங்களைப் பற்றி விமர்சிக்கும் வாய்ப்பை அப்போது அவர் எனக்குக் கொடுத்தார்.அரசாங்கம் உபதேசிக்கும்,ஒழுக்கம்,எய்ட்ஸ் பற்றிய விளம்பரங்கள், விழிப்புணர்வு இயக்கங்கள் ஆகியவை குறித்த எனது கருத்துக்களை,எல்லா அரசு மேடைகளிலும் பேசவும்,விவாதிக்கவும்,முழு சுதந்திரத்தோடு சொல்வதற்கும்,காரணமாக இருந்தவர் சு.சமுத்திரம்.இறுதி நோக்கம்,சாதாரண மக்களின் வாழ்க்கையை ஒரு துளியாவது மேம்படுத்துவதற்கு உதவுவதாக இருக்குமானால்,யாரும் மனதுக்குப்பட்டதை சொல்லலாம் என்பது சமுத்திரத்தின் ஆழமான நம்பிக்கை என்று எனக்குப்படுகிறது.இந்த அணுகுமுறைதான் அவரது எழுத்திலும் வெளிப்படுகிறது.
எய்ட்ஸ் நோயாளிகளின் வலிகளை,வேதனைகளை வெளிப்படுத்துவதை விடவும்,இந்த தொடர்கதையில்,சமுத்திரம் அதிக வெற்றி பெறுவது எய்ட்ஸின் பெயரால் மோசடிகளில் ஈடுபடுகிற சில மருத்துவர்களையும், ‘தொண்டு’ நிறுவனங்களையும் அம்பலப்படுத்து வதிலேயேயாகும்.கலைவாணி பாத்திரம்,சமுத்திரத்தின் வேதனைகளுக்கும்,தார்மீகக் கோபத்துக்கும் வடிகாலாய் விளங்குகிறது;குடும்பக் கட்டுப்பாடு திட்டம் எப்படி முறைகேடாகவும்,அராஜமாகவும் நடைமுறையில் ஒரு காலகட்டத்தில் இருந்ததோ,அதே திசையில் எய்ட்ஸ் திட்டம் போய்க் கொண்டிருப்பது பற்றி மருத்துவத்துறையிலும்.சமூக நலப்பணித் துறையிலும்,பலர் கவலையோடு இருக்கிறார்கள்.அவர்களின் பிரதிநிதியாக சமுத்திரம்,இந்த நாவலில் செயல் பட்டிருக்கிறார்.அதே சமயம்,வெவ்வேறு தளங்களில்,மனித இயல்புகள்,எப்படி செயல்படுகின்றன என்பதில் ஆர்வம் காட்டும் எழுத்தாளனாக,எய்ட்ஸ் நோயாளி மனோகருடன்,விதவிதமான முறைகளில் உறவாடும் பல்வேறு மனிதர்களை நமக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார்.