’ சிறகு முளைத்த பெண் ‘ ஆன ஸ்ர்மிளா ஸெய்யித் தனது புதிய தொகுதியுடன் வாசகர்களைச் சந்திக்கிறார். முந்தைய தொகுப்பில் ஈட்டிய
நம்பிக்கையை இரண்டாம் தொகுப்பில் பலப்படுத்திக்கொள்கிறார். முந்தைய கவிதைகளில் இருந்து முன் நகர்ந்து செல்கிறார். பெண்ணிருப்பின்
சுகதுக்கங்களை அழுத்தமாகப் பேசுபவை இந்தத் தொகுப்பின் கவிதைகள். தன் இருப்பின் நியாயங்களை, போராட்டங்களை பெருமிதத்தை, தான் தேடிப்
பெற்ற விடுதலையை எடுத்துரைப்பவை இவை. வழுமையான உணர்வுகளுடன் இறுகி இருக்கும் மனதுக்கு ‘ ஒவ்வா ‘ இக் கவிதைகள். ஏனெனில் இவை
‘ சற்றெனும் சாயமற்ற வார்த்தை ‘ களைக் கொண்டவை. உடலின் மொழியிலும் உடலைத் தாண்டியும் இயங்கும் இந்தக் கவிச் சொற்கள் அகண்ட
மானுடத்தின் வேட்கையை நிறுவுகின்றன.