தேடித் தேடிப் படித்த நூல்களின் காதலர், தனது உரைகளால் இந்திய நாடாளுமன்றத்தையே அதிரவைத்த அரசியல் ஆற்றலாளர், கலைஞரின் மனசாட்சி, தி.மு.கவின் திசைகாட்டி, மாநில சுயாட்சி போற்றிய தேசியத் தமிழர் - முரசொலி மாறன். அரசியலில் முரசொலி மாறன் ஒரு குறிஞ்சி மலர். இந்திய அரசியலில் தமிழகத்தின் பங்கை உறுதி செய்ததிலும், சர்வதேச அரசியலில் இந்தியாவின் பங்கை உறுதி செய்ததிலும் வெளிப்படும் முரசொலி மாறனின் மன உறுதி மலைப்பைக் கொடுக்கக் கூடியது. ஆனால், அத்தனை சாதனைகளையும் அதிர்ந்துகூடப் பேசாமல் அமைதியாகவே செய்து வந்தார் அவர். கட்சி நிர்வாகிகளிடம் கண்டிப்பையும், கட்சித் தொண்டர்களிடம் அன்பையும் காட்டிய மாறனின் இழப்பைக் காலங்கள் கடந்தும் நினைவுகூர்கின்றனர் தி.மு.கவினர். தோஹா மாநாட்டில் முரசொலி மாறன் ஆற்றிய பணிகளைப் பற்றி அறிந்தவர்கள், அவர் இழப்பை இந்திய அரசியலின் பேரிழப்பாக வர்ணிக்கின்றனர். ஆனால் அவரை அறிந்த மக்களுக்கு அவரைப் பற்றி முழுமையாக அறிய வாய்ப்புகள் குறைவாகவே கிடைத்திருக்கின்றன. அதிகம் பேசாத, தான் அதிகம் பேசப்படுவதை விரும்பாத ஒருவராக, தனது தாய்மாமனையே தாயாகக் கொண்ட அன்பு மனிதராக வாழ்ந்து மறைந்தவர் முரசொலி மாறன். அவரைப் பற்றிக் கூறும் அரசியல் ஆவணமாகவும் ஓர் அற்புத மனிதரின் வரலாறாகவும் இந்நூல் வெளிவருகிறது.