மொழி என்பது அகராதிகளில் இலக்கண நூல்களில் மட்டும் அடங்கிவிடும் ஒரு திட்டவட்டமான அமைப்பு அல்ல. அது, தான் புழங்கும் பண்பாட்டுச் சூழலின் உயிரோட்டமான பிரதிபலிப்பு, அகராதிளாலும் இலக்கண நூல்களாலும் ஒருபோதும் முழுமையாக வரையறுத்துவிட முடியாத பண்பாட்டுத் தளத்தைத் தன் ஊற்றாகக் கொண்ட இடையறாத நீரோட்டம், எனவே மொழிபெயர்ப்பு நூல்களையும் தாண்டி விரிவடையும் ஒரு பண்பாட்டுச் செயல்பாடாகவே இருக்க முடியும்.
மொழிபெயர்ப்பு என்பது வெறும் அறிவுத்தளம் சார்ந்த பயிற்சி மட்டுமே அல்ல. அது ஒரு சவால் என்பேன். மூலப்படைப்பை வாசிக்கும் போது உண்டாகும் உணர்வுக்கு நெருக்கமான உணர்வு மொழிபெயர்ப்பில் கிடைக்கும் போதுதான் மொழிபெயர்ப்பு பணி நிறைவடைய முடியும். அதற்க்கு மொழி ஆர்வம், தேர்ச்சி, மொழிபெயர்ப்பு திறன், படைப்பாற்றல், கடின உழைப்பு, அர்ப்பணிப்பு உணர்வு ஆகிய அனைத்தும் தேவை.