கவிதைகள்,வாழ்க்கை ஆத்மீகத்தைக் கண்டறியும் முயற்சி எனலாம்.ஆகாசமுத்து,அவற்றைக் கையில் விளக்காக ஏந்தியிருக்கிறார்.விளங்கிக்கொள்ள முடியாத வாழ்க்கைச் சம்பவங்களை,சமூகச் சூழலை அறிந்துகொள்ள அவருக்கு இந்தக் கவிதைகள் உதவுகின்றன.உள்ளேயும் வெளியேயும் எழும் கேள்விகளுக்கு இதன் மூலம் விடை காண முயல்கிறார்.
சிறு சிறு கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்தும் நோக்குடன் தொகுப்பிலுள்ள கவிதைகள்,ஆவேசத்துடன் எழுகின்றன.அந்த மன எழுச்சி,கவிதையின் வடிவத்தைக் கணக்கிலாக்கிக் கொள்ளாமல் திமிறும் அம்சங்களையும் இந்தக் கவிதைகளில் காண முடிகிறது.பாதக,சாதகத்திற்கு அப்பாற்பட்டு சில அபூர்வமான கவித் தருணங்களைத் தரிசிக்கவும் இவை உதவுகின்றன.
தமிழ்க் கவிதை முன்னோடிகள் புழங்கிய மொழிகளின் பாதிப்பிலிருந்து ஆகாசமுத்து கவிதைகள் வேர் பிடித்துள்ளன.ஆனால் தனக்காக ஒரு மொழியைப் பதம் பார்த்துப் பழக்க வேண்டும் என்னும் ஆசையையும் இந்தக் கவிதைகள் மூர்க்கத்துடன் வெளிப்படுத்துகின்றன. -மண்குதிரை