மனத்தின் மான்பே மனிதனின் மாண்பு,மனத்தின் வன்மையே மனிதனின் வன்மை,மனத்தின் வளமையே மனிதனின் வளமை என்பதைத் தன் வாழ்க்கை நிகழ்ச்சிகளின் வாயிலாகவும்,பல நாட்களின் பயிற்சிகளின் மூலமாகவும் அவற்றைப் பற்றி எண்ணித் தம் மனத்தே தோன்றிய உணர்வின் அடிப்படையிலும் பெற்ற கருத்துக்களைத் தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற நல்லுணர்வால் கட்டுரைகளாக வடித்தெடுத்து தந்துள்ளார்கள்.
இந்நுலைக் கற்பார் எல்லாரும் மனத்தூய்மை,செய்வினைத் தூய்மை இரண்டிலும் மேம்பட்டு விளங்க வேண்டும் என்பதே ஆசிரியர்தம் விழைவு என்பதனை எண்ணி நூலாசிரியரை வாழ்த்தி மகிழ்கிறேன்.
போகிற போக்கில் மேம்போக்காகப் படித்துப் போட்டுவிட்டுப் போகும் நூலன்று இது.பன்முறை உணர்வு ஒன்ற கற்று,நூலின் ஒவ்வொரு சொல்லும் தருகின்ற பொருளை நினைந்து நினைந்து,உணர்ந்து,உணர்ந்து மனம் நெகிழ்ந்து நெகிழ்ந்து மனநலமும் வினை நலமும் உடையதாய் விளங்க வேண்டும் என்பதே இந்நூலாசிரியரின் வேட்கையும் விழைவும் ஆகும். -இராம.இருசுப்பிள்ளை