வியாச முனிவரால் எழுதப்பட்ட பதினெட்டு புராணங்களுள் ஒன்றான மச்ச புராணம் பகவான் ஸ்ரீமன் நாராயணன் மீன் அவதாரமாக வடிவெடுத்து நீர்ப்பிரளயத்திலிருந்து இவ்வுலகைக் காத்த வரலாற்றைக் கூறுகிறது. திருமாலின் பத்து அவதாரங்களில் மச்ச அவதாரமே அவரது முதல் அவதாரம் என்பதால் பதினெண் புராணங்களில் மேலும் சிறப்புப் பெறுகிறது மச்ச புராணம்.
இப்புராணத்தில் சிவபெருமானின் பெருமைகளை மகாவிஷ்ணுவே தனது பக்தனிடம் சிறப்பித்துக் கூறுகிறார். சிவபெருமானை சினம் கொள்ள வைத்த தட்சயாகம், பராசக்தி செய்த தவம், பிரம்ம சிருஷ்டி, பிரம்மனின் தலையை சிவபெருமான் கொய்தது, கையில் பிரம்ம கபாலம் ஒட்டிக்கொண்டது, தாருகாவனத்தில் பிட்சாடனராகத் திரிந்த சிவபெருமான் செய்த லீலைகள், இருபத்தி ஐந்து சிவ ரூபங்கள், தாரகாசுரனுடன் போர், திரிபுர வதம், பார்வதி கல்யாணம், முருகப் பெருமானின் பிறப்பு என்று சிவபெருமானின் பராக்கிரமங்கள் மிக விரிவாகச் சொல்லப்பட்டுள்ளன.
மேலும் இந்த மச்சபுராணத்தில் புராணக் கதைகள், நீதிநெறிகள், போதனைகள் தவிர, யுகங்களின் கணக்கு, ரிஷிகளின் பரம்பரை என்று காலவியல், தொடர்பான கணக்கியல் தகவல்களும் இருக்கின்றன. இன்னும் பிதிர்களுக்குச் செய்ய வேண்டிய சிராத்தம், அதனால் ஏற்படும் நன்மைகள், பலவகைப்பட்ட விரதம் இருப்பதன் நன்மைகள், அதனால் அடையும் பலன்கள், விரதங்களை சரியாகச் செய்யாவிட்டால் ஏற்படும் தீமைகள் என்று நமது சரீரத்துக்கும் ஆன்மாவுக்கும் நன்மை தரும் ஏராளமான அறிவியல் தகவல்கள் புராண கவசத்திற்குள் ஒளிந்து கொண்டிருப்பதை அறிய முடிகிறது.
இப்புராணத்தைப் படிப்பவர்கள், கேட்பவர்கள் யாராகிலும் அவர்கள் அனைத்துப் பாவங்களிலிருந்தும் விடுபட்டு விஷ்ணு லோகத்தை அடைவர் என்று பெரியோர் சிறப்பித்துச் சொல்லியிருக்கிறார்கள். நாமும் மச்ச புராணம் படித்து விஷ்ணுவின் திருப்பாதகமலங்களைச் சரணடைவோம் வாருங்கள்.