இந்த ஊரில் ஓடும் ஆற்றுக்கு ஆயிரமாயிரங் காலத்து வரலாறு இருக்கிறது.நான்கு ரத வீதிகளில் ஓடும் நெல்லையப்பர் காந்திமதி தேருக்கு ஐநூற்றாண்டு கால கம்பீரம் இருக்கிறது.அம்மன் சன்னதித் தெருவில் இருக்கும் இந்த வீட்டின் திண்ணைக்கு நூற்றாண்டு கால ரகசியம் இருக்கிறது.மனித மனத்தின் வரலாறு எத்தனை காலத்தையது?தெரியவில்லை.
ஆறுதலாகி நிற்கிறச் சொற்களும், ‘என்னலே அம்பி மொகம் வாட்டமா இருக்கு என்ன சங்கதி?’ என்று முகம்பார்த்து மனத்தைப் படித்துவிடுகிற ஓர்மையும், ‘நல்லா இரி’ என்று எல்லாரையும் வாழ்த்தும் மனசும் குடியிருக்கிற,அந்தக் காரை வீட்டுத் திண்ணையில் சனமெல்லாம் வந்தமர்கிறது.அங்கேதான் மனித இருட்டின் இரகசியங்கள் இறக்கி வைக்கப்படுகின்றன.அவை இரகசியங்களாகவே நிலைத்தும் விடுகின்றன.